மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

ஆசியக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தோல்வி!

ஆசியக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தோல்வி!

ஆசியக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகம் அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

17ஆவது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா, அல் அய்ன் ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுகிறது.

இதில் நேற்று (ஜனவரி 10)நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்தில் யுஏஇ அணியின் வீரர் கைபான் முபாரக் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அதன்பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் யு.ஏ.இ. அணி 1-0 என முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 88ஆவது நிமிடத்தில் யு.ஏ.இ. அணியின் வீரர் அலி அகமது மாப்கவுத் ஒரு கோல் அடித்தார். கடைசி வரை போராடிய இந்திய அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், யு.ஏ.இ. அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. தாய்லாந்துக்கு எதிராக ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் 1 -4 என்ற புள்ளிக்கணக்கில் வென்றிருந்தது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வியைத் தழுவியதால் ‘ஏ’ பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் பக்ரைனை ஜனவரி 14ஆம் தேதி எதிர்கொள்கிறது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon