மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

தீர்ப்பை ஏன் நிறுத்த வேண்டும்: பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் நீதிமன்றம்!

தீர்ப்பை ஏன் நிறுத்த வேண்டும்: பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

1998 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 33 பேர் பலியானதாக நடைபெற்ற போராட்டத்தில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி குற்றவாளி என்றும் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு செய்திருந்தார் இந்த வழக்கு நீதிபதி வி.பார்திபன் முன்னிலையில் இன்று (ஜனவரி 11) விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில், “தன் மீது நேரடியாகக் குற்றம்சாட்டப்படவில்லை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக மட்டுமே சேர்க்கப்பட்டேன். அதேபோல் சாட்சியங்களில் ஒருவர் கூட தன்னுடைய பெயரை பயன்படுத்தவில்லை. காவலர் ஒருவர் அளித்த சாட்சியத்தின் அடிப்படையிலேயே தண்டனை வழங்கப்பட்டது, அதனை நிறுத்தி வைக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

மேலும் 20 ஆண்டுகளாக இந்த வழக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், ”பாலகிருஷ்ண ரெட்டி மீது குறிப்பிட்ட எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை. காவலர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற இடைக்கால கோரிக்கை பாலகிருஷ்ண ரெட்டி சார்பில் முன் வைக்கப்பட்டது. அப்போது சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்தக் கோரிக்கை மீது பிற்பகலில் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon