மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

தமிழில் முகவரி: தபால் வாங்க மறுப்பு!

தமிழில் முகவரி: தபால் வாங்க மறுப்பு!

சென்னையிலுள்ள தபால் நிலையத்தில் தமிழில் முகவரி எழுதியதற்காகத் தபால் வாங்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் எஸ்.சோமசுந்தரம். இவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். தனது மனுதாரர்களுக்கான தகவல்களைச் சேர்ப்பிக்கும் வகையில், தபால் நிலையம் சென்று கடிதங்களை அனுப்புவது இவரது வழக்கம். கடந்த டிசம்பர் 21ஆம் தேதியன்று, இவர் வியாசர்பாடி தபால் நிலையம் சென்றார். அங்கு தனது தபால்களைப் பதிவு செய்து அனுப்புவதற்காகக் காத்திருந்தார். அவருக்கு முன் நின்ற முதியவர் ஒருவர் தனது தபாலில் தமிழில் முகவரி எழுதியிருந்தார். கவுண்டரில் இருந்த ஊழியர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். வேண்டுமெனில், வேறு தபால் நிலையம் செல்லுமாறு கூறினார்.

அவருக்குப் பின்னால் நின்றிருந்த சோமசுந்தரம் பத்துக்கும் மேற்பட்ட தபால்களை வைத்திருந்தார். அனைத்திலும் தமிழில் முகவரி எழுதப்பட்டிருந்தன. அதனை வாங்க மறுத்த ஊழியரிடம் காரணம் கேட்டபோது, தனக்குத் தமிழ் தெரியாது என்று கூறியிருக்கிறார். வேறு ஊழியரை இந்த இடத்தில் பணியமர்த்தலாமே என்று கேட்டபோது, நிலைய அதிகாரி தரப்பில் இருந்து எந்தப் பதிலும் இல்லை. “அதனால் வேறு வழியில்லாமல் புகார் புத்தகம் கேட்டேன். ஆனால், அங்கிருந்த ஊழியர் புகார் புத்தகமே இல்லை என்றார். இரண்டு மணி நேரம் கழித்து வாருங்கள்; சாயங்காலம் வாருங்கள் என்று மாற்றி மாற்றிப் பதில் அளித்தனர். பின்னர் புகார் தெரிவிக்க, தலைமை அலுவலகம் தொலைபேசி எண்ணைத் தருமாறு கேட்டேன். அதற்கும் மறுத்துவிட்டனர்” என்று தெரிவித்தார்.

ஒருவழியாக சென்னை தலைமை தபால் அலுவலகத்தில் உள்ள மூத்த கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டுள்ளார். அங்கிருந்த கீழ்நிலை ஊழியர் தகுந்த பதிலை அளிக்கவில்லை. அதன்பிறகு, தான் ஒரு வழக்கறிஞர் என்று கூறியபிறகே, சம்பந்தப்பட்ட அதிகாரி பதிலளித்துள்ளார். “சில மணி நேரம் கழித்து, தபால் நிலைய அதிகாரி தனது மேஜையில் இருந்து புகார் புத்தகத்தைக் கொடுத்தார். அதன்பின்னர், இது பற்றி புகார் எழுதினேன். தகுந்த பதில் வராததால் மின்னஞ்சல் செய்தேன்” என்று கூறினார் சோமசுந்தரம்.

தொடர்ச்சியாக இவர் கேள்விகள் எழுப்பியதன் பலனாக, நேற்று தபால் அலுவலகம் தரப்பில் இருந்து பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை நகர தபால் அலுவலகங்கள் வடக்குப் பிரிவின் கண்காணிப்பாளர் சித்ரா தேவி அளித்துள்ள பதிலில், சம்பந்தப்பட்ட அலுவலர் வேற்று மாநிலத்தவர் என்றும், இனிமேல் இதுபோல தவறு நிகழாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. “பதிவுக்காக வரும் தபால்களில் தமிழில் முகவரி எழுதப்பட்டிருந்தால் நிராகரிக்கக் கூடாது என்று அந்த ஊழியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர் வேற்று மாநிலத்தில் இருந்து வந்துள்ளதால், வியாசர்பாடி தபால் நிலைய அதிகாரி தக்க வகையில் வழிகாட்டுவார். அதேபோல, புகார் புத்தகம் தபால் நிலைய வளாகத்தில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் புகார் எழுப்பாதவாறு செயல்படும் வகையில், அங்குள்ள ஊழியர்களுக்கு வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. இம்முறை தங்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகர்யத்துக்கு வருந்துகிறோம்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தமிழில் தபால் முகவரி எழுத முடியாத எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று வேதனை தெரிவித்தார் சோமசுந்தரம்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon