மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

பிரதமர் நண்பர்தான், ஆனால் அரசியல் வேறு!

பிரதமர் நண்பர்தான், ஆனால் அரசியல் வேறு!

பிரதமர் மோடி தனக்கு நண்பர்தான் என்று குறிப்பிட்ட மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, ஆனால் அரசியல் என்பது வேறு என்றும் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி, கடலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, அரக்கோணம் தொகுதி பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் மோடி நேற்று (ஜனவரி 10) கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், “பழைய நண்பர்களுக்கும், கட்சிகளுக்கும் பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கவே விரும்புகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நம்பிக்கையின் அடிப்படையில்தான் கூட்டணி இருக்கும். கட்டாயத்தின் அடிப்படையில் நம் கூட்டணி இருக்காது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, “நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை. ஆட்சியுடன்தான் தொடர்பில் இருக்கிறோம். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஒரு நட்பு உள்ளது. பிரதமர் மோடி எனக்கு நண்பர்தான் என்றாலும் அரசியல் என்பது வேறு. வாக்கு வங்கிக்காகவே மத்திய பாஜக அரசு 10 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தது. அதிமுகவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆதரவளித்தால் வரவேற்போம். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளை காங்கிரஸ் கவனத்தில் கொண்டால் அதிமுக அதை வரவேற்கும்” என்று தெரிவித்தார்.

வேடசந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தம்பிதுரை, “ஊராட்சி சபைக் கூட்டம் என்ற பெயரில் பஞ்சாயத்துத் தலைவர் போல ஸ்டாலின் செயல்படுகிறார். ஸ்டாலினால் பஞ்சாயத்துத் தலைவராகத்தான் முடியும், முதல்வராக முடியாது. பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்குவதை தடுக்க திமுக ஆட்களை வைத்து வழக்கு போட்டுள்ளது” என்றும் குற்றம்சாட்டினார்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon