மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

பேராசிரியர் அன்பழகன்: நார்மல் வார்டுக்கு மாற்றம்!

பேராசிரியர் அன்பழகன்:  நார்மல் வார்டுக்கு மாற்றம்!

உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், ஜனவரி 9 ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

சளித் தொல்லை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகனுக்கு, மூச்சுத் திணறல் இருந்து வந்தது. இதனால் அப்பல்லோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தகவலறிந்த திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று பேராசிரியர் அன்பழகனை நலம் விசாரித்தனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “நெஞ்சில் சிறிது தொற்று இருப்பதால் அதனை மருத்துவர்கள் கண்காணித்துவருகின்றனர். அதற்காகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஒரிரு நாட்களில் நலம் பெற்று வீடு திரும்புவார்” என்று தெரிவித்தார். ஆனாலும் சளித் தொல்லையும் அதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறலும் இருந்ததால் தொடர் சிகிச்சையளித்தனர்.

இந்த நிலையில் பத்து நாட்களுக்குப் பின் முதல் லேசாக பேசத் தொடங்கிய பேராசிரியர் அன்பழகனுக்கு மூச்சுத் திணறல் வெகுவாகக் குறைந்தது. இதனால் இரண்டாவது தளத்தில் இருந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து கடந்த 9ஆம் தேதி பகலில் நான்காவது தளத்தில் இருக்கும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அப்போது அன்பழகனின் மகன் அன்புச் செழியன், மகள்கள் டாக்டர் மணமல்லி, டாக்டர் செந்தாமரை ஆகியோர் உடன் இருந்தனர்.

சென்னையில் இருந்தால் திமுக தலைவர் ஸ்டாலின் தினமும் மாலையும், காலையும் வந்து பேராசிரியரை சந்தித்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஊராட்சி சபை கூட்டத்துக்காக வெளியூரில் இருந்த அவருக்கு அன்பழகன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட தகவலை சொல்லியுள்ளனர்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon