மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

அலோக் வர்மா மீண்டும் நீக்கம்!

அலோக் வர்மா மீண்டும் நீக்கம்!

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, இரண்டாவது முறையாகப் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிபிஐக்குள் அதிகாரப் போட்டி நடந்ததைத் தொடர்ந்து அலோக் வர்மாவும், துணை இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தனாவும் அக்டோபர் 24ஆம் தேதி கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் முடிவு செல்லாது என்று அறிவித்ததோடு, மீண்டும் அவரை பணியில் அமர்த்த உத்தரவிட்டது. எனினும் கொள்கை முடிவுகளில் எதிலும் தலையிடக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிமன்றம், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் சிபிஐ இயக்குநர் மீதான குற்றச்சாட்டை விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்திருந்தது.

இதனிடையே கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மா 77 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று முன்தினம் சிபிஐ இயக்குநராகப் பணிக்குத் திரும்பினார். பணிக்குத் திரும்பியதும் அதிகாரத்தைக் கையில் எடுத்த அலோக் வர்மா சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் பிறப்பித்திருந்த உத்தரவை ரத்து செய்தார். அதாவது, ராகேஷ் அஸ்தனா மீதான புகார்கள் குறித்து விசாரித்து வந்த, அலோக் வர்மா குழுவில் இருந்த ஏ.கே.பாசி, என்.சே.சின்ஹா மற்றும் ஏ.கே. சர்மா உட்பட பணியிடை மாற்றம் செய்யப்பட்ட 10 பேரை மீண்டும் தனது அலுவலகத்துக்கே மாற்றம் செய்தார்.

இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பதிலாக பங்கேற்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி அடங்கிய மூவர் குழுவின் ஆலோசனை நேற்று (ஜனவரி 10) நடைபெற்றது. இந்த ஆலோசனையைத் தொடர்ந்து அலோக் வர்மா சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதாவது இந்த முடிவு 2:1 பெரும்பான்மை முடிவின்படி எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மட்டும் அலோக் வர்மாவை நீக்கும் முடிவை ஏற்கவில்லை என்றும் அவர் இந்த முடிவை ஒத்திப் போட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலோக் வர்மா மீது மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (சிவிசி) எடுத்த நடவடிக்கை சரியானது என்று பிரதமரும். நீதிபதியும் கருதியதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த முடிவை எதிர்த்த மல்லிக்கார்ஜுன கார்கே சிவிசியின் அறிக்கையைக் கேட்டுள்ளார் என்றும் டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழுவின் பரிந்துரையின்படி அலோக் வர்மா தீயணைப்புத் துறை, குடிமை பாதுகாப்பு, ஊர்க்காவல் படை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் மீண்டும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில் அலோக் வர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அலோக் வர்மா நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடி தன் மீதான விசாரணைக்கு அஞ்சியே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று விமர்சித்துள்ளது. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “மோடியின் மனதிலிருந்து இப்போது பயம் வெளிப்படுகிறது. இனி தூங்கமாட்டார். ராணுவப் படையிடமிருந்து ரூ.30,000 கோடியைத் திருடி, அனில் அம்பானியிடம் கொடுத்துள்ளார். அலோக் வர்மா இருமுறை மாற்றப்பட்டது, மோடி தனது சொந்தப் பொய்களின் கைதியாக இருக்கிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது” என்று விமர்சித்துள்ளார்.

இவ்வாறான பரபரப்பு சூழலுக்கு இடையே, தன் மீது லஞ்சம் வாங்கியதாகப் பதிவு செய்யப்பட்ட, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரி, ராகேஷ் அஸ்தனா தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 11) தீர்ப்பு வழங்கவுள்ளது.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon