மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

பேட்ட: பாட்ஷா இனி சாத்தியமா?

பேட்ட: பாட்ஷா இனி சாத்தியமா?

‘பேட்ட’ திரைப்படம் ஓர் அலசல்!

மதரா

ரஜினிகாந்த் எனும் நடிகன் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது உடல்மொழியால், வசன உச்சரிப்பால், அணுகுமுறையால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே உருவாக்கி வைத்துள்ள பிம்பம் மிகப் பெரியது. அந்தப் பிம்பத்துக்கான கதையாக இப்போது வரும் படங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ரஜினி என்ற சூப்பர் ஸ்டார் பிம்பத்துக்குத் தீனி போடும்படியான படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்து விவாதமாக உருபெற்றுள்ளது. ரஜினி ரசிகனால் மட்டுமே அதைச் சாத்தியப்படுத்த முடியும் எனக் கூறப்பட்டபோது ரஜினி வெறியன் எனத் தன்னை அறிவித்துக்கொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், பேட்ட படத்தின் மூலம் களமிறங்கியுள்ளார். கார்த்திக் சுப்புராஜால் அதைச் சாதிக்க முடிந்ததா என்பதைப் பார்க்கலாம்.

ரஜினி நடிக்கும் படம் என்றால் எப்போதும் பெரிய நட்சத்திரங்களின் கூட்டணி இடம் பெறும். இதிலும் விஜய் சேதுபதி, த்ரிஷா, சசிகுமார், மேகா ஆகாஷ், நவாஸுதின் சித்திக், பாபி சிம்ஹா எனத் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகர், நடிகைகளை இணைத்து படத்துக்குப் புதிய வண்ணத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர். 90களில் முன்னணி நாயகியாக இருந்த சிம்ரனும் இப்படத்தில் நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

மலைப் பாங்கான ஊரில் உள்ள கல்லூரியில் தற்காலிக விடுதிக் காப்பாளர் பதவிக்குச் சிபாரிசு மூலம் நுழைகிறார் காளி (ரஜினி). தனது அப்பாவின் செல்வாக்கால் பாபி சிம்ஹாவும் அவரது சகாக்களும் மாணவர்களைத் தொல்லைப்படுத்துகிறார்கள். அவர்களிடம் இருந்து மாணவர்களைக் காக்கிறார். அங்கு படிக்கும் ஒரு காதல் ஜோடிக்கு (சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ்) உதவும் காளிக்கும் காதல் மலர்கிறது.

வடநாட்டுக் கும்பல் அந்த மாணவனின் உயிரை எடுக்க விடுதிக்குள் இறங்க, அவர்களை துவம்சம் செய்து காக்கிறார் காளி. ஏன் வடநாட்டுக் கும்பல் அந்த மாணவனைக் கொல்ல வந்தது, காளி ஏன் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றினார் என்ற கேள்விகளுக்கு நீண்ட ஃப்ளாஷ்பேக் மூலம் பதிலைத் தந்து, கொல்ல வந்தவர்களை வென்று முடிக்கக் காளி கிளம்புவதாகத் திரைக்கதை பயணிக்கிறது.

ரஜினியுடன் இத்தனை நடிகர், நடிகைகள் நடித்துள்ளனரே இது ரஜினி படமா அல்லது பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ள படமா என்ற கேள்வி எழுந்தது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரஜினியை வலம்வரவைத்து இது முழுக்க ரஜினி படம் என்பதை நிரூபித்துள்ளார் இயக்குநர். அதே சமயத்தில் மற்ற நடிகர், நடிகைகளுக்கான முக்கியத்துவமும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. குறைவான நேரம் திரையில் தோன்றினாலும் விஜய் சேதுபதி, நவாஸுதின், சிம்ரன், சசிகுமார், மாளவிகா மோகனன், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோருக்கு மனதில் நிற்கும்படியான கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதில் முக்கியத்துவம் இல்லாத ஒரே நபர் த்ரிஷா மட்டும்தான். அவரது கதாபாத்திரத்துக்கான பங்களிப்பு பெரிதாக இல்லாதது ஏமாற்றமே.

ரஜினியின் முதல் படத்திலிருந்து இப்போது வரை அவர் நடித்த மாஸ் காட்சிகளை எல்லாம் நினைவுபடுத்தும் விதமாகப் பல காட்சிகளை உருவாக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். குறிப்பிட்ட படங்களில் குறிப்பிட்ட காட்சிகள் மனதைக் கவர்ந்தது என்பதற்காக அந்தக் காட்சிகளை எல்லாம் தொகுத்து திரைக்கதையில் அடுக்கினால் ‘மாஸ்’ உருவாகிவிடும் என்று நினைத்துச் செய்துள்ளனர். உதாரணமாகக் கேட்டைத் திறந்து ரஜினி உள்ளே நுழையும் காட்சி பிரபலம் என்பதற்காகப் படம் முழுக்க வெவ்வேறு இடங்களில் சுமார் பத்து கேட்டுகளை ரஜினி திறக்கிறார்.

நவாஸுதின் சித்திக் தரப்பு எப்படி சனந்த் ரெட்டியை அடையாளம் கண்டு கொல்ல வருகின்றனர் என்பது சரியாகச் சொல்லப்படவில்லை. திரைக்கதை தனது பாதையை மாற்றும் இந்தக் காட்சியில் மேம்போக்காக அது காட்டப்படுகிறது. ஃப்ளாஷ்பேக் காட்சியில் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் இழந்து நிற்கும் ரஜினி கதாபாத்திரம் 20 வருடங்களாக என்ன செய்தது என்பதைப் பற்றிய விவரங்களுக்குள்ளும் செல்லவில்லை.

ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று பூடகமாக அறிவிப்பதும் வந்தால் என்ன மாற்றங்களைக் கொண்டுவருவேன் என்று சொல்வதும் பாட்ஷாவுக்குப் பிறகான படங்களில் தொடர்ந்து நடந்துவருகிறது. காலா, கபாலி ஆகிய படங்கள் நேரடி அரசியல் கருத்துகளைக் கொண்டிருந்தன. இந்தப் படத்தில் ரஜினி மீண்டும் தனது ‘நான் முதலமைச்சரானால்’ என்ற வகையான வசனங்களைப் பயன்படுத்தியுள்ளார்.

முதல் பாதியில் விடுதிக் காப்பாளராக வரும் ரஜினியின் நடவடிக்கைகளும் அந்த வயதில் மலரும் ஒரு காதலும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளன. பனிசூழ்ந்த மலைப் பிரதேசப் பின்னணியில் இக்காட்சிகள் அமைந்திருந்தது கூடுதல் சிறப்பு. இதுவரை பார்த்திராத ரஜினியை அந்தக் காட்சிகளில் பார்க்கலாம். ரஜினிக்கு இயல்பாய் வரும் நகைச்சுவை பல இடங்களில் மிளிர்கிறது. அதில் வழக்கமான ரஜினியைத் தாண்டிய புதுமையும் இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் காட்சிகளில் வரும் ரஜினியிடம் அந்தப் புதுமை இல்லை.

ஆரம்பத்தில் விஜய் சேதுபதி தரப்புக்குப் பெரியளவில் பில்டப் கொடுக்கப்படுகிறது. ஆனால் ரஜினிகாந்த் அதை எளிதாக சமாளித்துவிடுகிறார். உடல்ரீதியாக மோத வலிமை இல்லாத கதாபாத்திரமாகவே நவாஸுதின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வஞ்சகத்தால் எதிர்த் தரப்பை வீழ்த்துவதை வழக்கமாகக் கொண்டுள்ள அவரிடம் ஃப்ளாஷ்பேக்கில் இருந்த வில்லத்தனம் இரண்டாம் பாதியில் இல்லை.

விஜய் சேதுபதியை மையமாகக் கொண்டு க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் திருப்பத்தில் ரஜினி - விஜய் சேதுபதி கதாபாத்திரங்களுக்கு அதுவரை கொடுத்த ஒட்டுமொத்த பில்டப்பும் வீணாகிப் போகிறது.

தங்கள் தனிப்பட்ட விஷயங்களுக்காகப் பழி தீர்த்துக்கொள்ளும் கதையில் ஆரம்பம் முதல் பல உயிர்கள் போன வண்ணம் உள்ளன. இரண்டாம் பாதியில் துப்பாக்கிச் சத்தமும், குண்டு வெடிப்பும் ஓயவில்லை. ஆனால், போலீஸ் என்ற ஒரு அம்சம் படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எங்கும் இல்லை.

அனிருத்தின் பின்னணி இசை படத்தோடு இணைந்து ரசிக்க வைக்கிறது. படத்தின் பெரிய பலமே ஒளிப்பதிவுதான். இயற்கை அழகு சூழ்ந்த பகுதியில் காதலைக் காட்டும் போதும் துப்பாக்கிச் சத்தம் ஒலிக்க, ரத்தம் தெறிக்கும் போதும் திருவின் ஒளிப்பதிவு பார்வையாளர்களுக்கு விருந்து படைக்கிறது. படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் இரண்டாம் பாதியின் சில இடங்களை இன்னும் கொஞ்சம் கறாராக வெட்டியிருக்கலாம். அதற்குத் திரைக்கதையும் உதவியிருக்க வேண்டும். எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவிட்டது என்ற திருப்தியில் கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதையைத் தளர்வாக்கிவிட்டார்.

ஒட்டுமொத்தமாக பேட்ட திரைப்படம் கலவையான அனுபவத்தையே தருகிறது. அதற்கான காரணங்களையும் ஆராய வேண்டும்.

பாட்ஷா, அண்ணாமலை, முத்து, தளபதி உள்ளிட்ட படங்களில் இருந்த மாஸ் காட்சிகள் இப்போது வரும் படங்களில் இல்லை என்ற வருத்தமும் அதை நிறைவேற்ற ரஜினி ரசிகனால் மட்டுமே முடியும் என்று சொல்லப்படுவதுமே அபத்தமானது. மக்கள் மனம் கவர்ந்த நடிகன் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்த நேரம் அது. மேலும், ரஜினியின் வயதுதான் இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது. நாற்பதுகளில் ரஜினி செய்ததை எழுபது வயதை நெருங்கிய நிலையில் இப்போதும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதன் காரணமாகத்தான் அந்தப் படங்களைப் போல் வருமா என்று அலுத்துக்கொள்வது நிகழ்கிறது. காலா, கபாலி, பேட்ட ஆகிய படங்களில் அவரது வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை கொடுத்ததற்காக இயக்குநர்களைப் பாராட்டலாம். ஆனால், பாட்ஷா படத்தில் செய்த மாதிரியே அத்தனை சாகசங்களையும் செய்யச் சொல்வது ஏமாற்றமளிக்கிறது.

பழைய ரஜினியைத் திரையில் தோன்றவைப்பது என்னும் பேச்சே அர்த்தமற்றது. சுரேஷ் கிருஷ்ணாவோ, கே.எஸ்.ரவிக்குமாரோ தங்களை ரஜினி ரசிகன் என அறிவித்துக்கொண்டு ஹிட் கொடுக்கவில்லை. இப்போது அவர்களே நினைத்தாலும் அதே மாதிரியான படத்தை கொடுக்க முடியாது. லிங்காவின் தோல்வியை அதற்குள்ளாக ரசிகர்கள் மறந்து போயிருக்க மாட்டார்கள். இயற்கைக்கு எதிராக யோசிப்பதை விடுத்து கதாபாத்திரத்துக்கேற்ப ரஜினிகாந்தை பயன்படுத்தினால் அவரது ரசிகர்கள் பார்க்கத் தவறிய அல்லது இயக்குநர்கள் காட்ட மறந்த மற்றொரு முகத்தைக் காணலாம். அது பாட்ஷாவைவிட அற்புதமாக வரும் வாய்ப்பும் உண்டு.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon