மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

தமிழகத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம்!

தமிழகத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம்!

ராமேஸ்வரத்தையும் தமிழகத்தின் மற்ற பகுதிகளையும் இணைக்கும் இந்தியாவின் முதல் செங்குத்தான தூக்குப் பாலத்தைக் கட்ட இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், இரண்டு கிமீ தொலைவில் அமையவுள்ள இந்தப் பாலத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். “புதிய பாலத்தில் கப்பல்கள் செல்வதற்காக 63 மீட்டர் நீளத்துக்குத் தூக்கு பாலம் அமைக்கப்படும். இந்தப் பாலம் 18.3 மீட்டர் நீளம் கொண்ட 100 ஸ்பான்களையும், 63 மீட்டர் நீளம் கொண்ட நேவிகேஷனல் ஸ்பானையும் கொண்டிருக்கும். இது தற்போதைய பாலத்தை விட மூன்று மீட்டர் அதிக உயரம் கொண்டதாக இருக்கும்.

அடுத்த நான்காண்டுகளுக்குள் இந்தப் பாலம் கட்டி முடிக்கப்படும். இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு ரயில் இயக்கப்படும். இது பல பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். இந்தப் பாலம் கட்டுவதற்கு ரயில்வே திங்கட்கிழமையன்று (ஜனவரி 7) ஒப்புதல் அளித்தது” என்று ரயில்வே துறையின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

கப்பல்கள் எளிதாகச் செல்வதற்காக கடல் மட்டத்தில் இருந்து 22 மீட்டர் உயரத்தில் இந்தப் பாலம் அமைக்கப்படும். ஸ்கெர்சர் ரோலிங் லிப்ட் தொழில்நுட்பம் கொண்ட தற்போதைய பாலம் கப்பல்கள் செல்வதற்காகக் கிடைமட்டமாகத் திறக்கும். இந்தப் பாலம் செங்குத்தாக மேலே தூக்கும் வகையில் அமைக்கப்படும். ஒவ்வொரு முனையிலும் உள்ள உணர்கருவிகளைக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

“1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலினால் இரு இடங்களுக்குமான ரயில்வே இணைப்பு துண்டிக்கப்பட்டது. தற்போது அதை இணைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது இருக்கும் பாம்பன் பாலத்தின் நீளம் 2,058 மீட்டர். 104 வயதான பாம்பன் பாலத்துக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்” என்று அந்த ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon