மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

நடக்கும் கார்கள்: ஹூண்டாய் அறிமுகம்!

நடக்கும் கார்கள்: ஹூண்டாய் அறிமுகம்!

நடக்கும் தன்மையுடைய கார்களை ஹூண்டாய் நிறுவனம் தயாரித்து வருகிறது. விரைவில் இந்தக் கார்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் வருவதுபோல கார்கள் நடக்குமா என்ற கேள்விக்கான பதிலை தென்கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் வைத்துள்ளது. நான்கு கால்களுடன் நடந்துசெல்லும் வகையில் தயாரிக்கப்படும் இந்தக் கார்கள் தேவைப்பட்டால் உயரமான நிலப்பரப்புகளில் ஏறும் வகையில் உருவாக்கப்படுவதாகவும் ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் கார்களைத் தயாரிப்பதற்காக அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த சந்த்பெர்க் ஃபெரர் நிறுவனத்துடன் இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஹூண்டாய் நிறுவனம் பணியாற்றி வருகிறது. ‘எலைட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் காரானது எலெக்ட்ரிக் மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் இணைந்து உருவாக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் நுகர்வோர் மின்னணு சாதனங்கள் காட்சியில் (சிஇஎஸ்) இந்த நடக்கும் கார்களை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இது குறித்து ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தப் புதிய தொழில்நுட்பமானது அவசரக் காலங்களில் மிகவும் பயன்படும். உடல் ஊனமுற்றோர் இந்தக் கார்களின் உதவியால் தங்களது வீட்டின் வாசலிலேயே இந்தக் கார்களில் ஏறமுடியும். அவர்களின் சக்கர நாற்காலிகள் இந்தக் கார்களில் செல்லும் வகையில் இந்தக் கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், நில நடுக்கம், சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களின்போது இந்தக் கார்கள் சிறந்த மீட்பு வாகனங்களாக இருக்கும் என ஹூண்டாய் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon