மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 10 ஆக 2020

வாக்காளர்களுக்குப் பொங்கல் பரிசு! - தேவிபாரதி

வாக்காளர்களுக்குப் பொங்கல் பரிசு! - தேவிபாரதி

பண்டிகை அரசியல்: பதினாறு அடி பாயும் ‘அம்மாவின் பிள்ளைகள்’

கடந்த ஏழாம் தேதி தொடங்கி ரேஷன் கடைகளில் அலைமோதிக்கொண்டிருக்கும் கூட்டத்தைப் பார்த்தால் திகைப்பாக இருக்கிறது. இலவச வேட்டி சேலை, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை எனப் பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் பணமும் தருகிறது தமிழக அரசு. அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் இந்தப் பரிசுப் பொருட்கள் கிடைக்கும் என அறிவித்திருப்பது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவரும் பொருட்களைச் சீந்தாத நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தினரைத் திகைக்க வைத்திருக்கிறது. விலையில்லாப் பச்சரிசியும் சர்க்கரையும் வேண்டாம். ஆனால், இந்த விலையில்லா பணத்தை அப்படிச் சொல்ல முடியுமா?

பத்து ரூபாய், இருபது ரூபாயல்ல, ஆயிரம் ரூபாய்.

ஆயிரம் ரூபாயாச்சே, ஆயிரம் ரூபாய்.

அந்த விலையில்லாப் பணத்தைப் பெற்றுக்கொள்ளக் குடும்பத் தலைவரே நேரில் போக வேண்டும். தலைவிகூடப் போகலாம். ஆனால், நிச்சயமாக வேலையாட்களை அனுப்பிப் பெற்றுக்கொண்டு வரச் சொல்ல முடியாது. துணிப்பைகள், டிஜிட்டல் குடும்ப அட்டை, ஆதார் கார்டு சகிதமாகப் போய் முண்டியடித்துக் கொண்டிருக்கும் கூட்டத்துக்கிடையே புகுந்து ஓரிடத்தைப் பிடிக்க வேண்டும். வெயிலையும் குளிரையும் பொருட்படுத்தாமல் மணிக்கணக்காகக் காத்திருக்கத் தெரிய வேண்டும். வெயில் படாத, வியர்வை வாடை அறியாத உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் யாராவது ஓர் உறுப்பினருக்காவது அது கூடுமா? நல்லவேளை, வசதி படைத்தோருக்கு விலையில்லாப் பணம் வழங்குவதை நீதிமன்றம் கடந்த புதனன்று தடை செய்துவிட்டது. ஆனால், அதுவரை அவர்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

வேலை, வெட்டிகளைத் துறந்துவிட்டு அதிகாலையிலேயே வந்து வரிசையில் இடம்பிடிப்பதற்காகக் காத்திருப்பவர்களிடையே முட்டி மோதுவதொன்றும் அவ்வளவு ரசிக்கத்தக்க காரியமல்ல. தமக்குரிய இடத்தைப் பிடிப்பதற்காக ஒருவரையொருவர் இடித்துத் தள்ளுகிறார்கள், வசை மாரி பொழிகிறார்கள், எல்லாக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொடுக்கிறார்களாமே, நமக்கும் கிடைக்குமில்லையா? ஏதாவது காரணத்தைக் காட்டி இல்லையென்று கைவிரித்துவிட மாட்டார்களே? பழைய கோட்டைப் புதூர் ரேஷன் கடை வரிசையில் நின்றிருந்த நடுத்தர வயதுப் பெண் ஒருவர் தனது ஆதார் அட்டையைக் கொண்டுவர மறந்துவிட்டார். வரிசையில் நின்றிருந்த மற்றவர்களிடம் ஆதார் அட்டைகள் இருந்தன. ஒருவர் வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் பான் கார்டு அட்டையையும் கொண்டு வந்திருந்தார். மற்ற சிலர் வாக்காளர் அடையாள அட்டைகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டு வந்திருந்தார். அதெல்லாம் இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை. ஆதார் அட்டை கட்டாயம் வேண்டும். இல்லையென்றால் பச்சரிசியும் கரும்பும் விலையில்லா ஆயிரம் ரூபாய்ப் பணமும் கிடைக்காது.

ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே வந்து முன் வரிசையில் இடம்பிடித்து நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்மணி உடனடியாக வரிசையிலிருந்து பின்வாங்குகிறார். ஓட்டமும் நடையுமாகப் போய் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் தன் வீட்டை அடைந்து ஆதார் அட்டையோடு வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் பான் கார்டையும் வாக்காளர் அடையாள அட்டையையும் எடுத்துக்கொண்டு வியர்க்க விறுவிறுக்கத் திரும்பி வந்து சேர்கிறார். வரிசையில் முன்பு பிடித்து வைத்திருந்த இடம் இப்போது இல்லை. இப்போது கடைசி நாற்பது ஐம்பது பேர்களில் ஒருவர். விலையில்லாப் பரிசுப் பொருட்களையும் பணத்தையும் பெற்றுக்கொண்டபோது மாலை 5.00 மணி. கிட்டத்தட்ட ஒரு முழு நாள் காத்திருந்திருக்கிறார் அந்தப் பெண்மணி.

சிலருடைய கைகளில் தண்ணீர் பாட்டில்கள் இருக்கின்றன. வேறு சிலர் முறுக்கு, மிக்சர், போண்டா என எதையாவது கொண்டுவந்திருக்கிறார்கள். வெயிலைப் பொறுத்துக்கொள்வதில் பெரிய பிரச்சினை இல்லை. ரேஷன் கடைகளிலும் அரசு மருத்துவமனைகளிலும் பள்ளிகளிலும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வாக்குச் சாவடிகளிலும் சினிமா தியேட்டர்களிலும் கோயில்களிலும் வெவ்வேறு தேவைகளுக்காக வரிசைகளில் காத்திருந்த அனுபவங்கள் இருக்கின்றன. இரண்டாண்டுகளுக்கு முன் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் இதை விட நீண்ட வரிசைகளில் இதைவிட நீண்ட நேரம் வரை காத்திருந்த அனுபவங்கள் அவர்களில் பலருக்கு இருக்கின்றன.

அந்த அனுபவங்கள் இப்போது கைகொடுத்திருக்கின்றன. அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட சிலர் இப்போது கையோடு சோற்றுப் பொட்டலங்களைக்கூட எடுத்து வந்திருக்கிறார்கள். பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் அவற்றைப் பிரித்து வரிசையில் நின்றபடியே இரண்டு வாய் போட்டுக்கொண்டு காத்திருப்பைத் தொடர்கிறார்கள். டீ, வடை, போண்டா வியாபாரிகளிலும் ஐஸ் விற்பவர்களும் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் காத்திருக்கிறார்கள். சில கடைகளுக்குக் காவல் துறையினரின் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கிறது. பொழுது சாய்வதற்குள் பச்சரிசியையும் பணத்தையும் பெற்றுக்கொண்டு வெற்றியுடன் வீடு திரும்புகிறார்கள்.

தமிழகத்தில், தமிழராக, தமிழக அரசின் குடிமகனாக வாழ்ந்துவருவதன் பெரும் பேறுகளில் ஒன்றை அடைந்துவிட்ட பெருமிதம், வழிந்துகொண்டிருக்கும் வியர்வையை மீறி அவர்களது முகங்களில் தென்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வசிக்கும் ஏழைக் கூலித் தொழிலாளியான அந்தப் பெண்மணிக்கு அந்த ஆயிரம் ரூபாய் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. இதன் மூலம் இவ்வாண்டின் பொங்கல் விழாவைக் குறைந்தபட்ச மகிழ்ச்சியுடன் அவரால் எதிர்கொள்ள முடியும். தன் பேரக் குழந்தைகளுக்கு துணியெடுக்க முடியும், வெள்ளக்கோவில் சந்தையிலும் நத்தக்காடையூர் சந்தையிலும் குழந்தைகளுக்கான சுடிதார் அல்லது கவுன் நூறு ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.

மேற்கொண்டு ஐம்பது ரூபாயைச் செலவழித்தால் இன்னும் இரண்டு சள்ளைகள் கரும்பு வாங்கிவிட முடியும். கரிநாளில் நூறு நூற்றைம்பது ரூபாயைச் செலவழித்தால் பிராய்லர் கோழிக் கறி வாங்கிச் சமைத்துப் போட்டுவிடலாம்.

இந்தத் தொகையை வங்கிக் கணக்கில் போட்டுவிட்டிருக்கலாமே என யாரோ கேட்டது நினைவுக்கு வருகிறது. அப்படிச் செய்திருந்தால் நீண்ட வரிசைகளில் கால் கடுக்க நின்றுகொண்டிருக்கத் தேவையில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இதை ஒரு திடமான நினைவாக மக்கள் மனதில் பதிய வைக்க முயன்றிருக்கிறது. இரண்டு ஐந்நூறு ரூபாய்த் தாள்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ளும்போது சிலரது கண்கள் பனிக்கின்றன, சிலர் மவராசன் என இன்னும் பெயர் பிரபலமாகாத தங்கள் முதல்வரை வாழ்த்திவிட்டுப் போகிறார்கள்.

உள்ளுர் அதிமுக பிரமுகர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் போய் விநியோகத்தைக் கண்காணிக்கிறார்கள், வரிசையில் நின்றுகொண்டிருக்கும் மக்களை வாழ்த்துகிறார்கள், மிகத் தணிந்த குரலில் அம்மா அரசின் கருணையைப் பற்றிப் பேசுகிறார்கள், சில இடங்களில் குடிநீர் வழங்கக்கூடச் செய்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் அரசியல் நடவடிக்கை இது என்பதில் சந்தேகமில்லை. மூன்று நான்கு மாதங்களுக்குள் மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டாக வேண்டும். ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அவசியமான காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம். அவை தவிர உள்ளாட்சித் தேர்தல்கள்.

அரசு தங்கள் அம்மாவின் வழியைப் பின்பற்றுகிறது. நலத்திட்டங்கள், விலையில்லாப் பொருட்கள் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெறவும் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ளவும் முயற்சி செய்கிறது. கடந்த காலங்களில் அவற்றின் மூலமாகவே அவர்களுடைய அம்மாவின் தலைமையிலான கட்சி நம்ப முடியாத வெற்றிகளைப் பெற்றது.

அம்மா இல்லாத நிலையில் அம்மாவின் வழியில் ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பவர்கள் இப்போது பதினாறு அடி பாயத் தயாராகியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. பொங்கலுக்கு அம்மா நூறு ரூபாய் கொடுத்தார், அம்மாவின் அரசு அதைவிடப் பத்து மடங்கு அதிகமாகக் கொடுத்திருக்கிறது. ஆயிரம் ரூபாய், ஒரு சிறிய தொகைதான். ஆனால், அரசியல் ரீதியில் எடப்பாடி அரசுக்கு அது ஆயிரம் பொன்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon