மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

எல்கேஜி, யூகேஜி: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு!

எல்கேஜி, யூகேஜி: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு!

அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்படும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் அந்தந்த ஒன்றியங்களில் உபரியாக உள்ள ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்ய வேண்டுமென்ற தமிழக அரசின் உத்தரவுக்குத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படுமென்று அறிவித்தார் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். இதன்மூலம் அரசுப்பள்ளிகளில் குறைந்துவரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென்று நம்பிக்கை தெரிவித்தார். வரும் கல்வியாண்டில் இருந்து இதை அமல்படுத்தும்விதமாக, தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் கருப்பசாமி சமீபத்தில் உத்தரவொன்றைப் பிறப்பித்தார். அதில், பள்ளி வளாகங்களில் இயங்கிவரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் பாடம் நடத்துவதற்கு அந்தந்த ஒன்றியங்களில் உபரியாக உள்ள ஆசிரியர்களைப் பணி இடத்துடன் பணி நிரவல் செய்ய வேண்டும். பெண் ஆசிரியர்கள் இல்லாவிட்டால், ஆண் உபரி ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்ய வேண்டும்” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இதற்குத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கென தனியாக ஆசிரியர்கள் நியமிக்காமல் உபரியாக உள்ள ஆசிரியர்களைப் பயன்படுத்துவது சரியாகாது என்று கூறியுள்ளனர். ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு அந்தப் பணியைச் செய்வது தங்களது பணி வாழ்க்கையைப் பாதிக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “மாண்டிசோரி ஆசிரியர்களுக்கென தனியாகப் பயிற்சிகள் உள்ளன. நாங்கள் அனைவரும் தொடக்கப்பள்ளி மாணவர்களைக் கையாள்வதற்கான பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவர்கள்” என்று தெரிவித்துள்ளார் தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த பி.கே.இளமாறன். அரசின் முடிவினால் தமிழகத்திலுள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பணிச்சுமை மேலும் அதிகரிக்கும் என்றும், ஓர் ஆசிரியரின் தகுதியை ஆராயாமல் இந்தப் பணிக்கு நியமிக்கப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், உபரியாக உள்ள ஆசிரியர்களை மட்டுமே எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் பாடம் எடுக்க அரசு பயன்படுத்தவுள்ளதாகக் கூறினார் பள்ளிக்கல்வித் துறையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் அதிகாரி, இதைச் சோதனை முறையில் முயற்சி செய்து பார்ப்பதாகவும், இதற்காக அந்தந்தப் பகுதியிலுள்ள தலைமையாசிரியர்களிடம் இருந்து, உபரியாக உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பட்டியலைக் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon