மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

சென்னை: குடியிருப்புகள் விற்பனை உயர்வு!

சென்னை: குடியிருப்புகள் விற்பனை உயர்வு!

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டில் சென்னையில் குடியிருப்புகள் விற்பனைச் சந்தை 3 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து சொத்து ஆலோசனை நிறுவனமான நைட்ஃபிராங்க் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘2018ஆம் ஆண்டு சென்னையில் 15,986 வீடுகள் விற்பனையாகியுள்ளன. ஆனால் 2017ஆம் ஆண்டில் 15,520 வீடுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன’ என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நைட்ஃப்ராங்க் நிறுவனத்தின் சென்னை கிளை இயக்குநர் காஞ்சனா கிருஷ்ணன் தி இந்து ஆங்கில ஊடகத்திடம் பேசுகையில், “2018ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் குடியிருப்புகள் விலை 3 விழுக்காடு சரிவைக் கண்டது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமான பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைக் கட்டுமான நிறுவனங்கள் அறிவித்தன” என்று கூறியுள்ளார்.

2018ஆம் ஆண்டில் 10,373 வீடுகள் விற்பனைக்குப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 12 விழுக்காடு அதிகம் எனவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் 9,235 வீடுகள் மட்டுமே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. அதிகபட்ச விலைகளுக்குக் குடியிருப்புகள் விற்பனை செய்யப்படுவதால் ஒட்டுமொத்த தேவை என்பது சற்று மந்தமாகவே உள்ளது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம் (2016) மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவையும் கட்டுமான நிறுவனங்களுக்குப் பாதிப்பை உண்டாக்கியிருப்பதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon