மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜன 2019

கள்ளக்குறிச்சி மாவட்டமும் கழகங்களின் கணக்கும்!

கள்ளக்குறிச்சி மாவட்டமும் கழகங்களின் கணக்கும்!

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தின் இறுதி நாளான ஜனவரி 8 ஆம் தேதியன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

“நமது சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்களும், உளுந்தூர்பேட்டை சட்டமன்/ற உறுப்பினர் குமரகுரு அவர்களும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். இதற்கென சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார்” என்று அறிவித்தார். இதற்கு உறுப்பினர்கள் மேசையைத் தட்டி வரவேற்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்ட நொடிமுதலே இதில் அரசியல் இருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. ஏனெனில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் மிக கவனமாக கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர், இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்த சட்டமன்ற உறுப்பினர் பிரபுவின் பெயரை தவிர்த்தார்.

கடந்த தேர்தலின் போது பிரபு மக்களுக்கு கொடுத்த முதல் வாக்குறுதியே கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக ஆக்குவேன் என்பதுதான். ஆனால் இப்போது பிரபு டிடிவி தினகரன் ஆதரவாளராகச் செயல்படுவதை நன்கு அறிந்த முதல்வர் தனது அறிவிப்பில் கூட, பிரபுவின் பெயரை மறைத்தார்.

உடனடியாக வெளிநடப்பு செய்த பிரபு செய்தியாளர்களிடம் பேசுகையில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்காக நான் இதே அவையில் எத்தனை முறை போராடியிருப்பேன். அரசின் முக்கிய துறை அதிகாரிகளை சந்தித்து வலியுறு/த்தியிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு நான் தினகரனை ஆதரிப்பதால் என் பெயரைக் கூட உச்சரிப்பதைத் தவிர்த்துவிட்டார் முதல்வர். என் தொகுதி மக்களுக்கும், என் மாவட்ட மக்களுக்கும் இந்த மாவட்டத்தை உருவாக்குவதில் என் பங்கு என்ன என்பது கண்டிப்பாக தெரியும்” என்று கொந்தளித்துவிட்டார்.

ஆக, இப்படிப்பட்ட ஒரு அரசியலுக்கு இடையேதான் கள்ளக்குறிச்சி மாவட்ட அறிவிப்பே வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுவரை விழுப்புரம் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருந்து வந்த உளுந்தூர் பேட்டை கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய தொகுதிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு சேர்க்கப்படாலாம் என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்க்கப்படுகின்ற தொகுதிகளை வைத்து திமுக, அதிமுக இரண்டிலும் மாவட்டச் செயலாளர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

இப்போதைய நிலவரப்படி திமுகவின் விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய தொகுதிகள் இருக்கின்றன. இதற்கு மாவட்டச் செயலாளராக அங்கயற்கண்ணி இருக்கிறார். அதிமுகவில் மேற்கண்ட நான்கு தொகுதிகளோடு திருக்கோவிலுர் தொகுதியும் சேர்த்து விழுப்புரம் தெற்கு மாவட்டமாக இருக்கிறது.

அதிமுகவில் நிலைமை தெளிவாக இருக்கிறது. இப்போதைய விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளரும் உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான குமரகுருவே கள்ளக்குறிச்சியின் அதிமுக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்பது அதிமுகவில் தெளிவாகத் தெரிகிறது.

காரணம்?

“பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதல்வர் உருவாக்கிக் கொடுத்திருப்பதே தனது நெடுநாள் நண்பரான குமரகுருவுக்கான அன்புப் பரிசாகத்தான். ஒரு மாவட்டம், மாவட்டத் தலைநகர், புதிய கலெக்டர் அலுவலகம் , அதற்கான நில ஆர்ஜிதம் என வெகு சாதாரண செலவுகளே சில நூறு கோடிகள் ஆகும். சின்ன சேலம் குட்டூரோடு, கள்ளக்குறிச்சி பகுதிளில்தான் கலெக்டர் அலுவலகம் கட்ட வேண்டி வரும். ஏற்கனவே இங்குள்ள பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் குமரகுருவுக்கு வேண்டியவர்களிடம் தான் இருக்கிறது. எனவே அந்த வகையில் குமரகுரு ஆதரவாளர்களுக்கும், அதிமுகவினருக்கும் பெரிய பிசினஸ் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அவர்தான் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளராக ஆக்கப்படுவார்” என்கிறார்கள் அதிமுகவிலேயே.

அப்போது திமுகவில்?

திமுகவில் நடக்கும் விஷயங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன!

மதியப் பதிப்பில் காண்போம்

(தொடரும்)

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 11 ஜன 2019