தேங்காய் மற்றும் கொப்பரைத் தேங்காய்க்கு மார்ச் மாதம் வரையில் நல்ல விலை கிடைக்கும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தேங்காய் விலை நிலவரங்கள் குறித்து ஆய்வு நடத்தி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் தற்போது பண்டிகைக் காலம் என்பதால் நல்ல தரமான தேங்காய்களுக்குக் காய் ஒன்றுக்கு 15 முதல் 17 ரூபாய் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல நல்ல தரமான கொப்பரைத் தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு 105 ரூபாய் கிடைக்கும் எனவும் மார்ச் மாதம் வரையிலும் அதிக விலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இதனால் உற்பத்தி குறைந்துள்ளது. பண்டிகைக் காலத்தில் தேவை உயர்ந்திருப்பதும் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. தேங்காய்க்கான தேவையைப் பூர்த்தி செய்ய கர்நாடகாவிலிருந்தும் வாங்கப்படுகிறது. கொப்பரைத் தேங்காயைப் பொறுத்தவரையில் உடுமலைப்பேட்டை, தாராபுரம், கோபிசெட்டிப்பாளையம், பல்லடம் மற்றும் பட்டுக்கோட்டையிலிருந்து பெருந்துறை சந்தைகளில் விற்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 20.79 லட்சம் ஹெக்டேரில் தேங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தென்மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மட்டும் 81 விழுக்காடு அளவுக்குத் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது.