மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

ரயில் ஓட்டுநர்களுக்கு மனநல ஆலோசனை!

ரயில் ஓட்டுநர்களுக்கு மனநல ஆலோசனை!

இருப்புப் பாதையைக் கடக்கும் மனிதர்கள், விலங்குகள் அடிபட்டு இறப்பது, தற்கொலை செய்வது, ரயில்பெட்டி தடம்புரள்வது போன்றவற்றைக் காணும் ரயில் ஓட்டுநர்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இது அவர்களது பணித்திறனைப் பாதிப்பது மட்டுமல்லாமல், அன்றாடச் செயல்பாட்டையும் சீர்குலைக்கிறது. இதனைத் தவிர்க்கும் வகையில், ரயில் ஓட்டுநர்களுக்குத் தகுந்த உளவியல் நிபுணர்கள் மூலமாக மனநல ஆலோசனைகள் வழங்க முடிவு செய்துள்ளது ரயில்வே துறை.

இந்த முடிவு மிகவும் தாமதமானது என்று கூறியுள்ளனர் ரயில் ஓட்டுநர்கள். தற்போதுவரை, விபத்துக்குப் பிறகு ரயில் ஓட்டுநர்களின் மனநிலையைச் சீராக்க எந்த வழிமுறையும் பின்பற்றப்படவில்லை. “ரயில் ஓட்டுநர்கள் தான் அந்த துயரத்தை நேரில் கண்களால் காண்கின்றனர். விபத்து, தற்கொலைக்குப் பிறகு இறந்தவர்களின் உடல் பாகங்கள் சக்கரங்களில் மாட்டியிருப்பதைப் பார்க்கின்றனர். இதனால் அவர்கள் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டால், எங்களால் ஒழுங்காகச் சாப்பிடவோ, தூங்கவோ முடியாது” என்று தெரிவித்துள்ளார் தென்னக ரயில்வேயைச் சேர்ந்த அகில இந்திய லோகோ பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.பாலச்சந்திரன். அப்படிப்பட்ட ஓட்டுநர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவதென்பது நல்ல முடிவென்று தெரிவித்துள்ளார்.

ஏதேனும் விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ரயில்வே மண்டல மருத்துவமனையைச் சேர்ந்த மனநல நிபுணர் ரயில் ஓட்டுநருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டுமென்று ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இதனை அமல்படுத்துவது குறித்து பற்றி ரயில் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பணியாளர்களிடம் கருத்து கேட்டுள்ளது தென்னக ரயில்வே.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon