மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

ராகுலுக்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு!

ராகுலுக்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு!வெற்றிநடை போடும் தமிழகம்

மோடி ஒரு பெண்ணுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று ராகுல் கூறியதால் அவர் பெண்களுக்கு எதிரானவர் அல்ல என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ், சமீபகாலங்களில் அரசியல் பற்றி தனது கருத்துகளை முன்வைத்து வந்தார். இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி திடீரென அரசியலில் குதித்தார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார்.

அவருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 10) பிரகாஷ் ராஜ், டெல்லி முதல்வரைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தெரிகிறது. தனது அரசியல் பயணத்துக்கு கெஜ்ரிவால் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும், விரைவில் அரசியல் தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த பிரகாஷ் ராஜிடம், ரஃபேல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின்போது ஒரு பெண் (நிர்மலா சீதாராமன்) பின்னால் பிரதமர் மோடி ஒளிந்துகொண்டிருக்கிறார் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுலின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், “ரஃபேல் விவகாரத்தில் மோடி இதுவரை நேரடியாகப் பதிலளிக்காமல் இருக்கிறார். இது பிரதமர் மோடி உண்மையிலேயே ஒளிந்துகொண்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது. ராகுல் காந்தி, பெண்களுக்கு எதிரானவர் அல்ல. சமீபத்தில் திருநங்கைக்கு கூட காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பதவி வழங்கியுள்ளார். அதையும் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon