மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

விண்ணைத் தாண்டிக் கனவு காணுங்கள்! - காம்கேர் கே.புவனேஸ்வரி

விண்ணைத் தாண்டிக் கனவு காணுங்கள்! - காம்கேர் கே.புவனேஸ்வரிவெற்றிநடை போடும் தமிழகம்

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? பகுதி - 6

ஓர் இளைஞனுக்குத் தான் ஒரு மகான் ஆக வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஒரு மகானை நாடிச் சென்றான்.

காவியும் பட்டையுமாய் அமர்ந்திருந்த அவரிடம், ‘ஸ்வாமி! உங்களை மகான் என்று ஊரே புகழ்கிறது. உங்களது இந்த நிலைக்குக் காரணம் என்ன?’ என்று கேட்டான்.

‘உண்கிறேன், உறங்குகிறேன், தியானம் செய்கிறேன்’ என்றார் அவர். இளைஞனுக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்துவிட்டது.

‘ஏன் ஸ்வாமி! இதைத்தான் ஊரில் எல்லோரும் செய்கிறார்களே! அப்படியானால் எல்லாரும் மகான்தானா?’ என்று சற்று நையாண்டியாகக் கேட்டான் அந்த இளைஞன்.

‘குழந்தாய்! எல்லாரும் அதைத்தான் செய்கிறார்கள். ஆனால், நான் உண்ணும்போதும், உறங்கும்போதும், தியானம் செய்யும்போதும் அதை மட்டுமே செய்கிறேன். மற்றதைப் பற்றி நினைப்பதில்லை. மனதை நான் செய்கிற செயலில் மட்டுமே நிலைப்படுத்துகிறேன். ஆனால், சாதாரண மனிதர்கள் ஒன்றைச் செய்யும்போதே, மற்றதில் மனதைத் திருப்புகிறார்கள். அதுதான் அவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்’ என்றார்.

இளைஞர்களாக இருக்கக்கூடிய இந்த வயதில்தான் மகானைப்போல மனதை ஒருமுகப்படுத்தி செயல்பட முடியும்.

உங்களுக்குப் பணத்துக்கோ, சாப்பாட்டுக்கோ, துணிமணிக்கோ, மொபைல்போன், லேப்டாப், பைக் போன்ற கேட்ஜெட்டுகளுக்கோ கவலையே இல்லை. ‘அம்மா எனக்கு இது வேணும், அப்பா இது இன்னிக்குள்ள வேணும்’ என்று ஆர்டர் செய்தால் போதும். அடுத்த நொடி, செய்து கொடுக்க அப்பா, அம்மா காத்திருக்கிறார்கள்.

நினைத்தால் மால்களில் நண்பர்களோடு சென்று அரட்டை அடிக்கலாம். தியேட்டர் சென்று சினிமா பார்க்கலாம். ஹோட்டலுக்குச் சென்று விரும்பிய உணவைச் சாப்பிடலாம்.

இவ்வளவு வசதிகளை அப்பா, அம்மா செய்து கொடுத்திருந்தாலும் அவர்கள் உங்களை படி என்று சொல்லிவிட்டாலோ அல்லது இன்டர்நெட்டில் ஃபேஸ்புக்கில், வாட்ஸ் அப்பில் நீண்ட நேரம் உட்காராமல் சீக்கிரமா தூங்கச் சொன்னாலோ, நேரத்துக்கு வீட்டுக்கு வரச் சொன்னாலோ உங்களில் எத்தனை பேரால் சிடுசிடுக்காமல், கோபப்படாமல் அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்க முடிகிறது?

உங்களுக்கெல்லாம் இது பொற்காலம். எல்லா வசதிகளும் இருக்கிறது. கேட்டதெல்லாம் கிடைக்கிறது. இந்த வயதில்தான் நன்றாகப் படிக்க முடியும், உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும், எதிர்காலம் குறித்துக் கனவு காண முடியும், கனவுகளை நிஜமாக்க உழைக்க முடியும்.

திருமணமாகி நீங்களும் பெற்றோர் நிலைக்கு வந்த பிறகு எம்.பி.ஏவோ, பிஹெச்.டியோ செய்ய நினைக்கும்போது இத்தனை சுதந்திரமாகப் படிக்க முடியுமா? மகான் சொன்னதைப்போல மனதை ஒருமுகப்படுத்த முடியுமா?

பரீட்சை அன்று குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கலாம், வீட்டில் கணவனுடன் அல்லது மனைவியுடன் ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். சமையல், சாப்பாடு என்று மனதை பரீட்சையில் கவனம் செலுத்தவிடாமல் எத்தனையோ கவலைகள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு காத்திருக்கும் உங்கள் மனதில்.

2015ஆம் ஆண்டு மும்பை வாஷிமில் உள்ள விவேகானந்தா ஜூனியர் கல்லூரி மாணவி உஜ்வாலா தனது 12ஆவது வகுப்புத் தேர்வு எழுதச் செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவரது தந்தை திடீர் மரணம் அடைந்தார். இதனால் துயரமுற்ற மாணவி, சோர்ந்து போய்விடாமல், மன தைரியத்துடன் தேர்வு மையத்துக்குச் சென்று தேர்வு எழுதினார். துக்கத்தை ஓரம்கட்டி வைத்துவிட்டு தேர்வு எழுத சென்ற அந்த மாணவியைப் பாராட்டி, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.

அப்பா இறந்த துக்கத்தைக்கூட மறந்து ஒரு மாணவியால் பரீட்சை எழுதுமளவுக்கு மனோதைரியம் உள்ள வயது இது. ஆனால், திருமணத்துக்குப் பிறகு உங்கள் குழந்தைக்குச் சிறு காய்ச்சல் என்றாலும், அலுவலக வேலையில்கூட கவனம் செலுத்த முடியாது. எதிர்பார்க்கின்ற காரணங்களோடு, எதிர்பாராத காரணங்களும் சேர்ந்துகொண்டு நித்தம் ஒரு மனநிலையில்தான் இருக்க வேண்டியிருக்கும். எனவே, உங்களுக்குக் கிடைத்திருக்கும் பொன்னான காலத்தை வீணடித்துவிடாதீர்கள். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

காலம் கொடுத்திருக்கும் உங்கள் இளமை காலகட்டத்தில் அதிகபட்சம் உங்களால் எந்த அளவுக்குக் கனவு காண முடியுமோ, அவ்வளவையும் கண்டுவிடுங்கள். அவற்றை நனவாக்க முயற்சி செய்யுங்கள்.

இளமைக் காலம் கடவுள் கொடுத்திருக்கும் வரம். காசை சம்பாதிக்கலாம், வீடு வாங்கலாம், கார் வாங்கலாம், எல்லா வசதிகளையும் பணத்தினால் பெற்றுவிடலாம். ஆனால், இளமையை எந்தக் காலத்திலும் திரும்பப் பெறவே முடியாது. எனவே, உங்கள் இளமைப் பருவத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் என்ன விதைக்கிறீர்களோ, அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.

கற்போம்... கற்பிப்போம்!

(அடுத்த பகுதி வரும் திங்களன்று)

நீங்கள் மட்டுமே காரணம் அல்ல!!

(கட்டுரையாளர் : காம்கேர் கே.புவனேஸ்வரி - காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் என்னும் ஐடி நிறுவனத்தின் CEO. நிர்வாகி, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என பன்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MDஆகக் கடந்த 25 ஆண்டுக்கும் மேலாகச் செயல்பட்டுவருகிறார். தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியல் குறித்த 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும் தொழில்நுட்பப் புத்தகங்களும் பல கல்லூரிகளில் பாடத்திட்டமாக உள்ளன. இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

முந்தைய பகுதிகள் :

பகுதி - 1 : உங்கள் திறமை எது என்று அறிவீர்களா?

பகுதி - 2 : கடமையும் விருப்பமும்!

பகுதி - 3 : ஹாபியே வேலையானால்…!

பகுதி - 4 : கடலை வற்றச் செய்த குருவிகள்!

பகுதி - 5 : நீங்கள் மட்டுமே காரணம் அல்ல!

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon