மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

மாடுகளுக்குத் தங்கும் விடுதி!

மாடுகளுக்குத் தங்கும் விடுதி!

டெல்லியில் மாடுகள் தங்குவதற்கு விடுதிகள் அமைத்துத் தரப்படும் என மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், முதன்முறையாக விலங்களுக்கென கொள்கைகள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “கால்நடை மேம்பாட்டுக்கான பராமரிப்புப் பிரிவை விலங்கு சுகாதாரம் மற்றும் நலத் துறை என்று மாற்றி அமைக்கப் பரிந்துரை செய்துள்ளோம். மாடுகளுக்கென தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். மேலும், பிரேதப் பரிசோதனை வசதியுடன் கூடிய 11 விலங்கு பிணவறைகள், உடல்களை எரியூட்டும் வசதி போன்றவற்றை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

முதலில் மாடுகள் தங்கும் ஐந்து இடங்கள் இருந்தன. அவற்றில், ஒன்றின் மீது புகார் அளிக்கப்பட்டதையடுத்து, மாடுகள் தங்கும் இடங்கள் நான்காகக் குறைந்துள்ளது. டெல்லியில் கும்மன்ஹேரா என்ற இடத்தில் மாடுகளுக்கென தங்கும் விடுதிகள் அமைக்கப்படவுள்ளன. இங்கே மாடுகளுக்கு உதவியாக முதியோர்கள் தங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 18 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. விலங்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம், விலங்குகள் இருக்குமிடம், அவற்றின் ஆரோக்கியம் மற்றும் செலுத்தப்பட்ட தடுப்பூசி போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்” என்று கூறினார்.

உரிமையாளர்களால் கைவிடப்பட்ட மாடுகள் இந்த விடுதிகளில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும், மாடுகளுக்கான உணவு, சிகிச்சை மற்றும் ஆரோக்கியத்துக்காக அரசு செய்யும் செலவுத் தொகையை மாடு உரிமையாளர்கள் அளிக்க வேண்டும் எனவும், தனது பேச்சில் கோபால் ராய் குறிப்பிட்டார். “ஜனவரி 16ஆம் தேதி திஸ் ஹஸாரி அருகே கால்நடைகளுக்காக ‘ரவுண்ட் தி கிளாக்’ என்ற மருத்துவமனை திறக்கப்படும். அரசாங்கம் தொடங்கும் முக்கியத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். சில நாட்களுக்குச் சோதனை அடிப்படையில் இந்த மருத்துவமனை இயங்கும்” என்று அவர் தெரிவித்தார்.

டெல்லியில் 76 கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் உள்ளன. ஆனால், இவற்றில் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேவை ஏற்பட்டுள்ளது. அதனால் 272 மருத்துவமனைகளை உருவாக்கவும், அவை 24 மணி நேரமும் செயல்படுமாறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று கூறினார் கோபால் ராய். ஆபத்தில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்துத் தகவல் தெரிவிக்க ஹெல்ப் லைன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், மாவட்ட அளவில் பறவைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon