மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

சட்டவிரோத பேனர்கள்: எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளது?

சட்டவிரோத பேனர்கள்: எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளது?

தமிழகம் முழுவதும் சட்டவிரோத பேனர்கள் வைத்ததற்காக எத்தனை பேர் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது எனத் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது பேனர் வைக்கும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, ஜெ நினைவு தினம், கலைஞர் சிலை திறப்பு விழா ஆகியவற்றுக்காகப் பேனர்கள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் விதிமீறல் பேனர்கள் வைப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகளைக் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் எம்.சத்ய நாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நடைபாதையில் நடந்து செல்வோர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சியினர் சாலைகளில் பேனர் வைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்ய நாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு முன் மீண்டும் நேற்று (ஜனவரி 9) விசாரணைக்கு வந்தபோது, சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுக்க அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவை ஏன் அமைக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பினர்.

தமிழகம் முழுவதும் சட்டவிரோத பேனர் வைத்ததற்காக எத்தனை பேர் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன, எத்தனை வழக்குகளில் விசாரணை நிலுவையில் உள்ளன என்பது குறித்து பிப்ரவரி 13ஆம் தேதிக்குள் அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon