மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 18 செப் 2020

கூட்டணி: தம்பிதுரைக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

கூட்டணி: தம்பிதுரைக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

அதிமுகவில் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் தம்பிதுரைக்குக் கொடுக்கப்பட்டுள்ளதா என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவைத் துணை சபாநாயகரும் கரூர் தொகுதி அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை, மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஊடகத்தினரை சந்தித்தபோது, பாஜகவுடனான கூட்டணி தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தம்பிதுரை, “திமுகவுடன் கூட்டணி இருக்குமா, இல்லையா என்பது போல கேள்வியைக் கேட்கிறீர்கள். இதுபோன்ற கேள்வி எழுவதற்கு அவசியமே இல்லையே. நாங்கள் எப்போது பாஜகவுடன் கூட்டணியில் இருந்திருக்கிறோம், இந்தக் கேள்வியைக் கேட்க” என்று பதிலளித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக நாகர்கோவிலில் நேற்று (ஜனவரி 9) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “எனக்குத் தெரிந்து அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும்தான் உள்ளனர். தம்பிதுரை அண்ணனுக்கு என்ன பொறுப்பு என்று தெரியவில்லை. ஒருவேளை கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் ஏதேனும் அவருக்குக் கொடுத்துள்ளார்களா என்று தெரியவில்லை. அதற்காக அதிமுகவுடன் கூட்டணி என்றெல்லாம் ஊடகங்கள் கூறிவிடாதீர்கள்” என்று தெரிவித்தார்.

சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் டெல்லியில் மத்திய அமைச்சர்களைச் சந்தித்த அதே நேரத்தில், சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசியிருந்தார். இதையடுத்து அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகத் தகவல் வெளியானது. பாஜகவுடனான கூட்டணி தொடர்பாக தம்பிதுரை எதிர்மறையாகப் பதிலளித்திருந்த நிலையில், இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.

முன்னதாக பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் தம்பிதுரைக்கும் கருத்து மோதல் இருந்துவந்தது.

வியாழன், 10 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon