மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

டிஜிட்டல் திண்ணை: ஜால்ரா கூட்டமாக மாறிய திமுக ஊராட்சி சபை - ஸ்டாலின் கோபம்!

டிஜிட்டல் திண்ணை:  ஜால்ரா கூட்டமாக மாறிய திமுக ஊராட்சி சபை - ஸ்டாலின் கோபம்!

மொபைலில் டேட்டா ஆனில் இருக்க, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது. லொக்கேஷன் திருவாரூர் - புலிவலம் காட்டியது.

“திமுக சார்பில் திட்டமிடப்பட்ட ஊராட்சி சபைக் கூட்டம் தமிழகம் முழுக்க இன்று தொடங்கியிருக்கிறது. திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க நேற்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து காரைக்கால் எக்ஸ்பிரஸில் எக்மோரிலிருந்து கிளம்பினார் ஸ்டாலின். முதல் வகுப்பு கூபே ஸ்டாலினுக்காக புக் செய்யப்பட்டிருந்தது. ரயில் பிளாட்பாரத்தில் 8.55 மணிக்கு வந்து நின்றதுமே ஸ்டாலின் வீட்டிலிருந்து ஒரு டீம் வந்தது. ஸ்டாலின் பயணிக்கும் அந்த கூபேவே ஒருமுறை க்ளீன் செய்தது. ரூம் ஸ்ப்ரே உள்ளிட்டவற்றை அடித்தது. படுக்கை விரிப்புகள், தலையணை உள்ளிட்டவை வீட்டிலிருந்து கொண்டு வந்ததைப் போட்டுத் தயார் செய்தார்கள். நான்கு பேர் பயணிக்கும் கூபேவில் ஸ்டாலினும் மா.சுப்ரமணியனும் மட்டுமே பயணம் செய்தார்கள்.

மா.சுப்ரமணியனுடன் இரவு நீண்ட நேரம் பேசிக் கொண்டேதான் இருந்தாராம் ஸ்டாலின். அப்போது, கலைஞரின் ரயில் பயணம் பற்றிய சில விஷயங்களையும் ஸ்டாலின் பேசியதாக மா.சுப்ரமணியன் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார். ‘என்னதான் சொகுசான காரும், சீக்கிரம் போக விமானமும் இருந்தாலும் தலைவர் கடைசி வரையிலுமே ரயில் பயணத்தைத்தான் அதிகம் விரும்பினாரு. ரயிலில் போறது அவருக்கு அவ்வளவு பிடிக்கும்...’ என்றும் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் புலிவலம் கிராமத்தில் முக்கிய ஏற்பாடுகளை மாவட்ட திமுக சார்பில் பிரம்மாண்டமாகச் செய்திருந்தார்கள். அதுவும் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் பார்த்துப் பார்த்து செய்திருந்தார்.

ஊராட்சி சபைக் கூட்டம் என்றாலும் திமுகவினர்தான் அதிகம் திரண்டிருந்தார்கள். ஸ்டாலின் உட்காரும் இடத்துக்கு நேராகப் பெண்களே அதிக அளவில் இருக்கும்படியும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அத்துடன் ஸ்டாலின் பேசும் போது, யாரும் எதிர்க்கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதால், திமுகவைச் சேர்ந்த பெண்களையே முடிந்தவரை நிரப்பியிருந்தார் கலைவாணன். கூட்டத்தினருக்கு மீடியாவின் கேமராக்கள் இடையூறாக இருக்கக் கூடாது என்பதால், நான்கு தென்னை மரங்களுக்கு இடையில் பரண் போல அமைத்து அதன் மீது மீடியா டீமை நிற்க வைக்கவும் ஐடியாவைத் கொடுத்தது ஓ.எம்.ஜி. குரூப். அதன்படியே அந்தரத்தில் நின்றிருந்தது மீடியா டீம். கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதை மின்னம்பலத்தின் 1 மணிப் பதிப்பில் செய்தியாக வெளியிட்டிருக்கிறோம். அவர் பேசிய பிறகு நடந்ததை இங்கே சொல்கிறேன்.

‘உங்க கிராமத்துக்கு இப்போதைக்கு உடனடித் தேவை என்ன? நீங்க யாரு வேணும்னாலும் கேட்கலாம்’ என ஸ்டாலின் கேட்க... கூட்டத்தில் இருந்த பெண்களில் சிலர் பேசினார்கள். ‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவே இல்லை. திமுக காரங்கதான் வந்து உதவி செஞ்சாங்க...’ என ஒரு பெண்மணி புகழ்ந்தார். பேசிய எல்லோருமே அதிமுக அரசைக் குறை மட்டுமே சொன்னார்கள். இன்னும் சிலர் ரோடு வசதி வேண்டும் எனக் கேட்டார்கள். கூட்டம் முடிந்த பிறகு பூண்டி கலைவாணனை அழைத்துப் பேசிய ஸ்டாலின், ‘இந்தக் கூட்டத்தோட நோக்கம் உங்களுக்குப் புரிஞ்சதான்னு எனக்குத் தெரியலை. கட்சி பேதம் இல்லாம எல்லோரையும் இந்த ஊராட்சி சபை கூட்டத்துக்கு வரவழைக்கணும்னு நான் சொல்லியிருந்தேன். வந்த எல்லோரும் நமக்கு ஜால்ரா மட்டும்தான் அடிச்சாங்க.

கட்சிக்காரங்களை மட்டும் சேர்த்துட்டு ஒரு கூட்டம் நடத்துறதா இருந்தா அதுக்கு நான் வரவேண்டிய அவசியமே இல்லையே... எல்லாத் தரப்பு மக்களும் வரணும்னுதான் இந்தக் கிராம சபைக் கூட்டம் என்ற ஐடியாவையே உருவாக்கினோம். இனி நடக்கப் போற கூட்டத்தையாவது அப்படி நடத்துங்க. கட்சிக் கூட்டம் மாதிரி ஊராட்சி சபையை நடத்த வேண்டாம்...’ என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகு தமிழகம் முழுக்க நடந்த கிராம சபைக் கூட்டங்களின் படங்களை அனுப்பச் சொல்லிப் பார்த்திருக்கிறார். பல கிராமங்களில் கூட்டத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் கையில், ‘முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். தமிழகத்தின் அவல நிலைக்கு’ என்ற தட்டி போர்டு கொடுத்திருந்தார்கள்.

அந்தப் போட்டோவைப் பார்த்ததும் டென்ஷனாகிவிட்டாராம் ஸ்டாலின். ‘நாம என்ன சொல்றோம்னு யாருக்கும் புரியலையா... இல்லை புரிஞ்சும் அவங்க இஷ்டத்துக்கு பண்றாங்களா? தட்டி போர்டு கையில் வெச்சு உட்கார இங்க என்ன திமுக கூட்டமா நடக்குது?’ என்று சத்தம் போட்டாராம். குன்றத்தூர் அருகே ஆதனூர் ஊராட்சியில் தா.மோ. அன்பரசன் தலைமையில் கூட்டம் நடந்திருக்கிறது. அங்கேயும் தட்டி போர்டு கையில் இருந்திருக்கிறது. அன்பரசனைத் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாகப் பேசிக் கடிந்து கொண்டாராம் ஸ்டாலின். இனி நடக்கப் போகும் கூட்டங்களில் இப்படி இருக்கக் கூடாது எனக் கடுமையான அட்வைஸ் கொடுத்திருக்கிறாராம்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

அதற்கு லைக் போட்டதுடன் காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

புதன், 9 ஜன 2019

அடுத்ததுchevronRight icon