மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: நீதிபதி கேள்வி, டென்ஷனில் பன்னீர்

 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு:   நீதிபதி கேள்வி, டென்ஷனில் பன்னீர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரியபோது எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு விசாரணை இன்று ஜனவரி 9 உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கு விசாரணையில் நீதிபதி கேட்ட கேள்விகளால் பன்னீர் தரப்பு வழக்கறிஞர்கள் டென்ஷன் ஆனார்கள்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வருக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென திமுக கொறடா சக்கரபாணி, தினகரன் தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், சபாநாயகர் அதிகாரத்தில் தாங்கள் தலையிட முடியாது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.இதனை எதிர்த்து திமுக சார்பில் கொறடா சக்கரபாணியும் மற்றும் தினகரன் தரப்பிலிருந்து வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இவ்வழக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன், அப்துல் நசீர் தலைமையிலான அமர்வில் இன்று (ஜனவரி 9) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதாடினார்.

, “நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவே கூடாது எனக் கடிதம் கொடுத்தவர் திமுக கொறடா சக்கரபாணி. ஆகவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் அரசுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்று கூறி அவர் வழக்கு தொடுப்பது நியாயமானதல்ல. அரசியல் உள்நோக்கம் கொண்ட இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதுபோலவே, “வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரும் தற்போது அதிமுகவில் இல்லை. இவர்களின் மனுக்களும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இவற்றையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது. கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கும் திமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென திட்டமிட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் வாதத்தில் குற்றம் சாட்டப்பட்டது,

மேலும், “11 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டனர். ஆனால் ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவில் இணையவே இல்லை. இது முழுக்க முழுக்க உட்கட்சி விவகாரம். எதிர்க்கட்சியான திமுகவிற்கு இதில் வேலை இல்லை” எனவும் வாதம் எடுத்துவைக்கப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரமாக வாதாடிய குரு கிருஷ்ணகுமார் பெரும்பாலான நேரம், “இந்த வழக்கு திமுகவின் கெட்ட எண்ணத்தால் தொடுக்கப்பட்டது. அவர்களுக்கு இந்த ஆட்சி இருக்கக் கூடாது என்ற நோக்கமே இருக்கிறது” என்ற ரீதியிலேயே வாதாடினார்.

கண்களை மூடிக் கொண்டே இதைக் கேட்டுக் கொண்டிருந்த நீதிபதி அசோக் பூஷன் ஒரு கட்டத்தில் குரு கிருஷ்ணகுமாரைப் பார்த்து, “இந்த வழக்குத் தொடுப்பதற்கு கெட்ட எண்ணம், உள் நோக்கம் என்பதெல்லாம் இந்த நீதிமன்றத்துக்கு தேவையில்லாதது. 11 பேரும் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட்டுள்ளார்களா, எதிராக செயல்பட்டுள்ளார்களா? அதுபற்றி சட்ட ரீதியாக வாதாடுங்கள்” என்று குறுக்கிட ஒரு கணம் திகைத்து டென்ஷனான குரு கிருஷ்ணகுமார் பின் கொஞ்ச நேரத்தில் தன் வாதத்தை முடித்தார்.

முன்னதாக இன்று மாநிலங்களவையில் பொருளாதார இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதால் மாநிலங்களவை உறுப்பினரான கபில் சிபல் அவைக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்த வழக்கில் திமுக தரப்பு வழக்கறிஞராக அவர் இருப்பதால் இன்று காலையே நீதிபதிகளிடம் விஷயத்தை சொல்லி, இன்று தன்னால் வாதாடாத இயலாத நிலையை மென்ஷன் செய்துள்ளார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நாளை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டனர். கபில் சிபலோ 15 ஆம் தேதி வைத்துக் கொள்ளலாம் என்றார். நீதிபதிகளோ, நாளை லிஸ்ட் செய்கிறோம், முடியாவிட்டால் வழக்கை ஜனவரி 17 ஆம் தேதி வாதாடலாம் என்று கூறினார்கள்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon