மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

வரி ஏய்ப்பு: ராகுல், சோனியாவுக்கு நோட்டீஸ்!

வரி ஏய்ப்பு: ராகுல், சோனியாவுக்கு நோட்டீஸ்!

100 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2011-12ஆம் நிதியாண்டில் ராகுல் காந்தி ரூ.154 கோடியும், சோனியா காந்தி ரூ.155 கோடியும் வருவாய் ஈட்டியதாகவும், ஆனால் இருவரும் தங்களது வருவாயைக் குறைத்து கணக்கு காட்டியுள்ளதாகவும் வருமான வரித் துறை இவ்விருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, இருவரும் பங்குதாரராக உள்ள அசோசியேட் ஜோர்னல்ஸ் நிறுவனத்தின் மூலமான வருவாயை வருமான வரித் தாக்கலில் குறிப்பிடவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த ஆண்டுக்கான வரித் தாக்கலில் ராகுல் காந்தி ரூ.68 லட்சம் மட்டுமே செலுத்தியதாகவும், ரூ.100 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாகவும் வருமான வரித் துறை குற்றம்சாட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஜராகினார். ”அசோசியேட் ஜோர்னல்ஸ் நிறுவனம் ரூ.90 கோடி கடனில் உள்ளது. வருமான வரித் துறை அதனை மறைத்து ரூ.40 கோடி சொத்து இருப்பதாகக் கூறுகிறது. ராகுல் மற்றும் சோனியா ஆகியோருக்கு தங்களது சொத்துகளை மறு ஆய்வு செய்யும் தகவல் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை” என்று சிதம்பரம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் இருதரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon