மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

காங்கிரஸில் இணைந்த திருநங்கை அப்சரா

காங்கிரஸில் இணைந்த திருநங்கை அப்சரா

மகிளா காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

பத்திரிகையாளர், சமூக ஆர்வலர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற பன்முகம் கொண்டவர் திருநங்கை அப்சரா ரெட்டி. குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராகவும், திருநங்கைகள் சமூகத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார். 2016இல் முதன் முறையாக பாஜகவில் இணைந்த அப்சரா ரெட்டி, பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு சசிகலா கூட்டணியில் இணைந்தார். தற்போது காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (ஜனவரி 8) நியமித்துள்ளார். இவர்தான் காங்கிரஸ் கட்சியில் பதவி வகிக்கும் முதல் திருநங்கை ஆவார். ராகுல் காந்தியுடனான அப்சரா ரெட்டியின் புகைப்படத்தை காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அப்சரா, “நான் மிகவும் பாரபட்சங்களையும், அநீதிகளையும் சந்தித்த பின்னணியில் இருந்து வருகிறேன். அந்தப் போலித்தனங்களும், பாகுபாடுகளும்தான் என்னை அநீதிக்கு எதிராகப் போராட ஊக்குவித்தது. பெண்களுக்கான உரிமைகளைவிட மத அடையாளம்மீது அதிக முக்கியத்துவம் செலுத்துகிற சக்திகளால் இந்தியா ஆளப்படுகிறது. இந்தியாவை உண்மையாகக் கட்டமைத்த கட்சி காங்கிரஸ். ராகுல் காந்தியின் பெண்களுக்கான நியாயமான பங்களித்தல், பெண்களை மையப்படுத்திய இலக்குகள் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது. அவரது தலைமையின் கீழ் நாடெங்கிலும் பெண்களுக்காக சேவை செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்தியாவில் உள்ள 40 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்கள் அவர்களது கணவன் அல்லது குடும்ப உறுப்பினர்களால் மோசடிகளுக்கும், புறக்கணிப்புகளுக்கும், வன்முறைகளுக்கும் ஆளாவதாக மனிதவள மேம்பாட்டு அறிக்கையின் பாலின சமத்துவமின்மை குறியீடு எடுத்துரைக்கிறது. பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவது எப்போதும் அதிகமாகவே உள்ளது. குற்றங்கள் மற்றும் வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க அவர்களின் குரல்கள், சட்டக் கொள்கைகள் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

“அதிமுக அரசு பாஜகவின் கரங்களால் விளையாடுகிறது. தமிழகத்தில் நிச்சயம் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்” என்றும் அப்சரா குறிப்பிட்டுள்ளார்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon