மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

10% இட ஒதுக்கீடு: அதிமுக வெளிநடப்பு!

10% இட ஒதுக்கீடு:  அதிமுக வெளிநடப்பு!

10 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையிலிருந்து அதிமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை அனுமதியளித்த நிலையில், இதுதொடர்பான மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் இன்று (ஜனவரி 9) மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடியதும் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி, மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும், இந்தக் கோரிக்கையின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினார். ஆனால் இதற்கு மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மறுப்பு தெரிவித்துவிட்டார். தொடர்ந்து கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்த கனிமொழி, மார்க்சிஸ்ட் எம்.பி டி.கே.ரங்கராஜன் பேசிக்கொண்டிருந்தபோது அவரது அருகே சென்று, ‘இது என்ன அநியாயம்’ என்று கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து டி.கே.எஸ்.இளங்கோவன், மசோதா அவசரமாக நிறைவேற்றப்படுவதாகக் கூறி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டுமென நோட்டீஸ் அளித்தார். ஆனால், இதற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு அனுமதி அளிக்காததால் தீர்மானம் ஏற்கப்படவில்லை.

இடஒதுக்கீடு விவாதத்தின் மீது காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய ஆனந்த் சர்மா, “ஐந்து மாநில தேர்தல் தோல்வியின் எதிரொலியால்தான் மத்திய பாஜக அரசு இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு வேலைவாய்ப்பே உருவாக்கப்படவில்லை, பிறகு எப்படி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கொடுக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

மசோதாவுக்கு அதிமுக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் பேசிய நவநீதகிருஷ்ணன், “பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது சட்டவிரோதமானது” என்று கூறி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டினார். “சாதி அடிப்படையில் மட்டும்தான் இடஒதுக்கீடு இருக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட நபருக்காக இருக்கக் கூடாது. இடஒதுக்கீட்டுக்கு பொருளாதார அடிப்படையில் இருக்கக் கூடாது” என்று வலியுறுத்தினார். தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு அமலில் இருப்பதாகத் தெரிவித்த நவநீதகிருஷ்ணன், 10 சதவிகிதம் இடஒதுக்கீட்டை செயல்படுத்தினால் அது தமிழக மக்களின் உரிமையை பாதிக்கும் என்றும் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

விவாதத்தில் பேசிய கனிமொழி, “பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது வரலாற்றுத் தவறாகும். படிக்கும், பணிபுரியும் இடங்களில் பட்டியலின மக்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பை கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டில் இன்றும் சாதிய ரீதியான பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. மதத்தை மாற்றிக் கொள்ளலாம், பொருளாதார நிலை மாறும் ஆனால் சாதியை மாற்ற முடியாது. இஸ்லாமியர்கள் எவ்வாறு பின் தங்கியுள்ளனர் என்பதை சச்சார் கமிட்டி அறிக்கை தெளிவுபடுத்தியது. மத்திய அரசு தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து அவற்றை மக்கள் மீது திணிக்கிறது. ஒரே இரவில் முடிவு செய்து மசோதாவை தாக்கல் செய்துள்ளனர்” என்று குற்றம் சாட்டினார்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon