மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

பழங்குடியினர் இட ஒதுக்கீட்டின் நிலை!

பழங்குடியினர் இட ஒதுக்கீட்டின் நிலை!

ஒன்றிய அரசின் அமைச்சரவை மற்றும் துறைகளில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் 47 விழுக்காடு இடங்கள் நிரப்பப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

முன்னேறிய சமூகங்களில் உள்ள ஏழை மக்கள் பயன்பெறும் விதமாகக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பொருளாதார அடிப்படையில் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, அதற்கான மசோதா நேற்று (ஜனவரி 8) மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கல்வி மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கிய பழங்குடியின மக்களுக்கு ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டு முறையே கடந்த ஆண்டுகளில் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்பது மக்களவையில் அளிக்கப்பட்ட தகவல்களின் மூலம் வெளிவந்துள்ளது.

பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் ஜஸ்வந்த் சிங் சுமன்பாய் பாபோர் மக்களவையில் பழங்குடியினருக்கு ஒன்றிய அமைச்சரவை மற்றும் துறைகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கை குறித்தும், அவற்றில் எவ்வளவு இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்பது குறித்தும் தகவல்களை அளித்துள்ளார். 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலத்தில் பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிதித் துறை நிறுவனங்கள், ஒன்றிய அமைச்சரவை, துறைகள் மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பழங்குடியின மக்களுக்கு 22,829 இடங்கள் இருந்தன. ஆனால் அதில் 15,874 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்பது ஊழியர்கள் மற்றும் பயிற்சித் துறையின் தரவுகளிலிருந்து எடுக்கப்பட்டு மக்களவையில் அளிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.

‘ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 2017ஆம் ஆண்டில் பழங்குடியினருக்கு இருந்த 6,887 இடங்களில் 3,595 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது 2017ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 47 விழுக்காடு இடங்கள் பழங்குடியினருக்கு நிரப்பப்படவில்லை என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon