மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

விவசாயிகளின் பலம் மோடிக்கு புரியும்: ராகுல்

விவசாயிகளின் பலம் மோடிக்கு புரியும்: ராகுல்

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விவசாயிகளின் பலம் என்ன என்பதை மோடிக்கு உணர்த்தியிருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றது. பாஜக 5 மாநிலங்களிலும் படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்க வைக்கும் முயற்சியில் பாஜகவும், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதிகளை அளித்து புறவாசல் வழியாக மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. குழந்தைக்கு லாலிபாப் கொடுப்பது போல் மக்களுக்கு விவசாய கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை அளித்து வாக்குகளைப் பெற்றுள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கும் இதே வாக்குறுதியை அளித்து ஏமாற்றுவார்கள். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 9) ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளின் பலம் என்ன என்பதை 5 மாநில தேர்தல் முடிவுகள் மோடிக்கு உணர்த்தியிருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். கடன் தள்ளுபடி மட்டும் விவசாயிகளுக்குத் தீர்வாகிவிடாது. நாட்டில் ஒரு புதிய பசுமைப் புரட்சியும் ஏற்பட்டாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

”ரஃபேல் விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்பதால் பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வரவே பயப்படுகிறார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் விவாதித்தும் எனது கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon