மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

நீதிமன்ற உத்தரவை மீறி வழங்கப்படும் 1000 ரூபாய்!

நீதிமன்ற உத்தரவை மீறி வழங்கப்படும் 1000 ரூபாய்!

வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்திலுள்ள நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுடன் 1,000 ரூபாய் வழங்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி 20 கிராம், உலர் திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் மற்றும் 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. கடந்த டிசம்பர் 22ஆம் தேதியன்று இது தொடர்பாக வெளியான அரசாணையில், இதற்காக மாநில அரசு 258 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆளுநர் அறிவித்த 1,000 ரூபாய்

கடந்த 2ஆம் தேதியன்று தமிழகச் சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பொங்கல் தொகுப்புடன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனைக் குறிப்பிட்டு, கடந்த ஜனவரி 4ஆம் தேதியன்று பொங்கலைச் சிறப்பாக கொண்டாடுவதற்காகப் பரிசுத் தொகுப்புடன் 1,000 ரூபாய் அளிக்கப்படும் என்று அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இதற்காக 1,980 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.

கடந்த 7ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக, காலையிலேயே மக்கள் நீண்ட வரிசையில் நின்று, பொங்கல் பரிசு பொருட்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

தடை விதிக்கக் கோரி மனு

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1,000 பணம் வழங்குவதை எதிர்த்து கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

“தமிழக அரசின் வரி வருவாய் என்பது ரூ.1,12,616 கோடி, அரசுக்குள்ள மொத்தக் கடன் 3,55,845 கோடி. இது தவிர பல்வேறு திட்டங்களுக்காக ரூ.43,962 கோடி கடன் பெறவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்தச் சூழலில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்குவது என்பது அரசுக்கு மேலும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே ரூ.1,000 வழங்கப்படுவதற்குத் தடை விதிக்க வேண்டும்” என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள் கேள்வி

இன்று (ஜனவரி 9) நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அரசுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, ‘இது மக்களின் வரிப் பணமா? இல்லை உங்கள் கட்சியின் பணமா?’ என்று கேள்வி எழுப்பினர்.

“பொங்கல் பரிசை ஏழை மக்களுக்கு வழங்குவதில் எந்த மாற்றுக் கருத்தும், தெரிவிக்கவில்லை. ஆனால் வசதி படைத்தவர்களுக்கு எதற்கு 1,000 ரூபாய் கொடுக்கப்படுகிறது” என்று கேட்டனர். அப்போது குறுக்கிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயண், “இது அரசின் கொள்கை முடிவு” என்று தெரிவித்தார்.

இது கட்சிப் பணமல்ல

அரசின் கொள்கை முடிவு என்றால் நீதிமன்றம் தலையிடக் கூடாதா என்று மீண்டும் கேள்வி எழுப்பினர் நீதிபதிகள். “என்ன நோக்கத்துக்காக இந்தப் பணம் வழங்கப்படுகிறது? இதன் மூலம் தமிழக அரசு என்ன சாதிக்க விரும்புகிறது. இது அரசியல் கட்சியின் பணமல்ல; மாநில அரசின் பணம். இதனை வைத்து மாநில உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம். சாலை உட்படப் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது” என்று கண்டனம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்குப் பணப்பரிசு வழங்குவதற்குத் தடை விதிப்பதாகவும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.

தடை ஏற்படுத்தும் பாதிப்பு

ஏற்கனவே தமிழக அரசு அறிவித்தபடி, தமிழகத்தில் உள்ள 1,96,16,093 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படவிருந்தது. மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் முன்னுரிமை அடிப்படையில் பெறும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 76,99,940. மத்திய, மாநில அரசின் உதவியுடன் 35கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களும் முன்னுரிமை அடிப்படையில் பெறும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 18,64,600. நீதிமன்ற உத்தரவுப்படி, மேலே குறிப்பிட்ட 95லட்சத்து 64ஆயிரத்து 540 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசான 1,000 ரூபாய் கிடைக்கும்.

அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் பெறாத குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 90,08,842.நீதிமன்ற உத்தரவுப்படி, இவர்களுக்குப் பணம் வழங்கப்பட மாட்டாது. மாநில அரசின் நிதி உதவியுடன் அரிசி தவிர்த்து முன்னுரிமையற்ற சர்க்கரை உள்ளிட பொருட்கள் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 10,01,6050 பேருக்கு பொங்கல் பரிசு கிடையாது. இதேபோல எப்பொருளும் இல்லாத முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் 41,106க்கும் பொங்கல் பரிசு வழங்கப்படாது.

நியாயவிலைக் கடைகளில் கூட்டம்

உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், தமிழகத்திலுள்ள சில பகுதிகளில் 1,000 ரூபாய் வழங்கப்படாததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை மாநகரத்திலுள்ள நியாயவிலைக் கடைகளில் 1,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் நடவடிக்கை தடைபடவில்லை.

சென்னை அடையாறு பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையொன்றுக்குச் சென்றது நமது மின்னம்பலம் குழு. அங்கு வரிசையாக நின்றிருந்தது மக்கள் கூட்டம். தினமும் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் 1,000 ரூபாய் வழங்கும் வகையில் இக்கடை வளாகத்தில் அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று (ஜனவரி 8) டோக்கன் வாங்கிய சிலர் இன்று காலையில் வரிசையில் நின்று 1,000 ரூபாய் வாங்கினர்.

திட்டமிட்டபடி விநியோகம் தொடரும்

தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தபடி, ஒவ்வொரு நாளும் 300 அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தகவல் வெளியானது. இதற்கு மாறாக, இன்று (ஜனவரி 9) 135 பேருக்கு டோக்கன் அளித்ததாகக் கூறினர் வரிசையில் நின்றிருந்த மக்கள். இதற்காகக் காலை 8 மணியில் இருந்து வரிசையில் நிற்பதாகவும் தெரிவித்தனர். இவர்களுக்கு மதியம் 1.30 மணியளவில் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. அங்கிருப்பவர்கள் இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், அப்பகுதியைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவரும் அங்கிருந்தார். நமது குழு அங்கு சென்றபோது, நேற்று வாங்கிய டோக்கனை காட்டி ஒரு பெண்மணி சத்தமிட்டுக் கொண்டிருந்தார். நெருங்கி விசாரித்ததில், அவர் நேற்று மதியம் நியாயவிலைக் கடையில் அளித்த டோக்கனைப் பெற்றதாகவும், காலையில் பணிக்குச் சென்றுவிட்டு மதியத்துக்கு மேல் மீண்டும் அங்கு வந்ததாகவும் தெரிவித்தார். வரும் ஜனவரி 13, 14 தேதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்காமல் விடுபட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக நியாயவிலைக் கடை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் 1,000 ரூபாய் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தடையை எதிர்த்து மனு

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார் தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு. இன்று விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon