மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

சரணாலயத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு!

சரணாலயத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு!

தேனியில் அமையவுள்ள வன உயிரினச் சரணாலயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுமார் 1,200 விவசாயிகள் அம்மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருஷநாடு மலைப்பகுதியில் வன விலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள 45 கிராமங்களில் சுமார் 10,000 விவசாயிகள் உள்ளனர். இரண்டு தலைமுறையாக இங்கு விவசாயம் செய்துவரும் இவர்களை அப்புறப்படுத்திவிட்டு, சுமார் 10,600 ஏக்கர் பரப்பளவில் மேகமலை வன உயிரினச் சரணாலயத்தை மத்திய அரசு அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்குத் தடை விதிக்கக் கோரி, இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உயர் நீதிமன்றத்தை நாடினர். ஆனால், நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. கடந்த ஜனவரி 7ஆம் தேதியன்று, வருஷநாடு மலைப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1,200 விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவைச் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, “எங்கள் வாழ்வாதாரத்தை அழித்து வன உயிரினச் சரணாலயத்தை அமைக்காதீர்கள்” என்று ஆட்சியரிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்துச் செய்தியாளர்களிடம் பேசிய பல்லவி பல்தேவ், வன உரிமைச் சட்டத்தின் கீழ் உரிமை கோரி பொதுமக்கள் அளித்துள்ள அனைத்து மனுக்களையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வன உயிரினச் சரணாலயத்தை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும், இவ்விடம் புலி, கரடி, யானை, மான் போன்ற உயிரினங்களைப் பாதுகாத்து சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என்றும் கூறியுள்ளனர் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon