மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

எம்ஜிஆர் கொள்கைகளைப் பரப்ப என்ன செய்தீர்கள்?: நீதிமன்றம்!

எம்ஜிஆர் கொள்கைகளைப் பரப்ப என்ன செய்தீர்கள்?: நீதிமன்றம்!

எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவைத் திறக்க அனுமதி அளித்த நீதிமன்றம் அவரின் கொள்கைகளை பரப்ப என்ன செய்தீர்கள் என்று அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, மதுரையில் 2017 ஜூன் மாதம் தொடங்கப்பட்டு, திண்டுக்கல்லில் டிசம்பரில் நிறைவடைந்தது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் அவரது நினைவாக நூற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை மெரினா கடற்கரைச் சாலையான காமராஜர் சாலையில் பொதுப்பணித் துறை அலுவலகம் எதிரில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நினைவு வளைவு அமைக்கத் தடை கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ் குமார் உயர் நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம். திறப்பு விழா நடத்தக் கூடாது எனவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்ய நாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வில் இன்று (ஜனவரி 9) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கட்டுமான பணிகள் முடிந்து விட்டதாகவும், எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17ஆம் தேதி வளைவைத் திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

எம்ஜிஆர்-ஐ பெருமைப்படுத்த ஆர்ச் கட்டினீர்கள், ஆண்டு முழுவதும் நூற்றாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பேனர் வைத்தீர்கள். அவரின் கொள்கை, கருத்துக்களைப் பரப்ப என்ன செய்தீர்கள்? பார்வையற்றோர் காதுகேளாதோர் நலனுக்கு என்ன செய்தீர்கள்? அவர்களுக்குப் பள்ளிகள் திறந்தீர்களா? அல்லது ஏற்கனவே உள்ள பள்ளிகளுக்கு வசதிகள் செய்து கொடுத்தீர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு மீது போர்த்தியுள்ள திரைகளை அகற்றி, திறக்க அனுமதித்த நீதிபதிகள், விழா ஏதும் நடத்தக் கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon