மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

தொடங்கியது பின்புலச் சரிபார்ப்பு சேவை!

தொடங்கியது பின்புலச் சரிபார்ப்பு சேவை!

இணையதளம் மூலம் பின்புலச் சரிபார்ப்பு சான்றிதழ் சேவையை, சென்னை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநில குற்ற ஆவணக் காப்பகமும் சென்னை பெருநகர காவல் துறையும் இணைந்து தமிழக பின்புலச் சரிபார்ப்பு சேவை (காவல் நன்னடத்தை சரிபார்ப்பு சேவை) அறிமுகப்படுத்தப்பட்டது. தனிநபர் விவரம், வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு மற்றும் வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு ஆகியவற்றை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்திற்காகத் தனிநபரிமிருந்து 500 ரூபாயும், தனியார் நிறுவனங்களிடம் இருந்து 1,000 ரூபாயும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், இணைய வழியில் பின்புலச் சரிபார்ப்பு சேவை இன்று (ஜனவரி 9) முதல் தொடங்கப்படுவதாகத் தெரிவித்தார். “இதன்மூலம் வேலை தேவைப்படுபவர்கள், வெளிநாடு செல்வோர் என பலரும் தங்களது தேவையைக் குறைந்த நேரத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியும். சான்றிதழின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய கியூஆர் கோடு உதவும். டெபிட் மற்றும் கிரெடி கார்டு மூலம் செலுத்தும் வசதியும் உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவுடன், பிவிஆர் எண் ஒன்று சம்பந்தப்பட்டவரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். அதன்மூலம், சான்று குறித்த நிலைகளை அறிய முடியும்” என்று அவர் கூறினார்.

மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் ஆணையர் சீமா அகர்வால் கூறுகையில், இந்த இணையதளம் மூலம் விண்ணப்பித்த நபர்களுக்குக் காவல் துறை விசாரணைக்குப் பின் 15 நாட்களுக்குள் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார். “தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளும் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. சரியான விவரங்கள் அளிக்காதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், காவல்துறை இணையதளம் மூலம் முதல் தகவல் அறிக்கையை பார்வையிடும் வசதி 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இதுவரை 5 லட்சத்து 53 ஆயிரத்து 753 பேர் பார்த்திருக்கின்றனர். காணாமல் போகும் வாகனங்கள் குறித்து, ஆன்லைனில் பதிவேற்றப்படுவதாகவும், இதன்மூலம், 3 மாதத்தில் 100 திருட்டு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon