மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

இரண்டாவது நாளாகத் தொடரும் போராட்டம்!

இரண்டாவது நாளாகத் தொடரும் போராட்டம்!

மத்திய அரசைக் கண்டித்து நடைபெறும் தொழிற்சங்கங்களின் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் நேற்று தொழிற்சங்கங்கள் ஈடுபட்டன. இன்று (ஜனவரி 9) இரண்டாவது நாளாக இப்போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதில் அனைத்து துறையினரும் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருப்பதால், தமிழகத்தில் அந்த அளவுக்குப் பாதிப்பு இல்லை.

தமிழகத்தில் பேருந்து இயக்கம்

தமிழகம் முழுவதும் சென்னை, விழுப்புரம், கோவை, சேலம் உள்ளிட்ட 8 போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், 20,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஓட்டுநர், நடத்துநர்களில் பலர் பணிக்கு வராததால் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், பெரிய அளவில் பாதிப்பு இல்லை. சென்னையைப் பொறுத்தவரை, 90 சதவிகித பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.

கேரளாவில் விடுமுறை

கேரளாவில் இரண்டாவது நாளாக ரயில்களை மறித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று காலை 6 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடந்தது. இதுபோன்று கொச்சி, கொல்லத்திலும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இன்றும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முற்றுகையில் மோதல்

சென்னையில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் கிண்டி ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பயணிகள் ரயில் நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியாமல் தவித்தனர். ரயிலை மறிக்கச் சென்றபோது, போராட்டக்காரர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருப்பினும், 20க்கும் மேற்பட்டவர்கள் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். அவர்களைத் தற்காலிகமாக கைது செய்து வைத்துள்ளனர் போலீசார். இந்தப் போராட்டம் தொடர்ந்து வலுப்பெறும் என்றும், மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால் இரண்டு நாள் போராட்டம் ஒரு வாரமாக மாறும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சையில் போராட்டம்

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இரண்டு பேருந்து நுழைவுவாயிலிலும் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பேருந்துகள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு தொழிலாளர் விரோதப் போக்கினைக் கைவிட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காலையிலேயே சரபோஜி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம்

டெல்லி, மும்பை, கொல்கத்தா, திருவனந்தபுரம், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.

கொல்கத்தாவில் நேற்று கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதால், இன்று அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மட்டும் மேற்கு வங்கத்தில் 400 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். பேருந்து மீது கல் எறிந்ததில் பெரும்பாலான மாணவர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon