மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

பொதுச் செயலாளர் பெயர்ப் பலகையைக் கூட அகற்ற முடியாது!

பொதுச் செயலாளர் பெயர்ப் பலகையைக் கூட அகற்ற முடியாது!

அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் -10

ஆரா

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீரை விடுவிக்க எடப்பாடி தரப்பு காய் நகர்த்துகிறது என்று கடந்த பாகத்தில் நாம் பேசியிருந்ததற்கு தர்மயுத்த ஆதரவாளர்கள் சிலர் எதிர்வினை ஆற்றினார்கள்.

“ஓ.பன்னீர் செல்வம் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டிருக்கிறார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி என்றால் கட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் என்பதுதான் அணிகள் இணைப்பின்போது முன்வைக்கப்பட்ட ஒரே நிபந்தனை. அதை பெயரளவில் ஏற்றுக் கொண்டாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் துணை முதல்வர் என்பதற்கான முக்கியத்துவத்தை ஆட்சியில் கொடுக்கவில்லை.

அதேநேரம் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிக்கு உரிய முக்கியத்துவத்தைவிட அதிக முக்கியத்துவத்தை எடப்பாடி தானாகவே எடுத்துக்கொள்கிறார் என்பதே உண்மை. ஓ.பன்னீர் செல்வத்துக்கு இப்போது டெல்லி தொலைவாகிவிட்டதால் சில விஷயங்களை அவர் கடந்து போக வேண்டியிருக்கிறது. ஆனால் எக்காரணம் முன்னிட்டும் பொருளாளர் பதவியை அவர் விட்டுக் கொடுக்க மாட்டார்” என்கிறார்கள்.

அணிகள் இணைப்புக்குப் பின், 2017 செப்டம்பர் 12ஆம் தேதி பொதுக்குழு நடந்தது. அந்த பொதுக்குழு மேடையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அம்மா), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (புரட்சித் தலைவி அம்மா) என இரு பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தன. இந்தப் பொதுக்குழுதான் கடைசியாக அதிமுகவில் நடந்த பொதுக்குழு.

அந்தப் பொதுக்குழுவில்தான் அதிமுக கட்சி விதி 43இல் திருத்தம் செய்யப்பட்டு கட்சியில் பொதுச் செயலாளர் என்ற பதவி ரத்து செய்யப்படுகிறது என்றும், மறைந்த ஜெயலலிதாவின் கொள்கைப்படி கட்சியை வழி நடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்படுகின்றன என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“அமைப்புத் தேர்தல் நடைபெறும்வரை ஒருங்கிணைப்பாளராகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் கே.பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் செயல்படுவர். பொதுச் செயலாளரின் அனைத்து அதிகாரங்களும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட அனைத்து வரவு செலவுகள், படிவம் ஏ, படிவம் பி உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள், கட்சி தொடர்பான அனைத்து அறிவிப்புகள், நியமனங்கள், ஒழுங்கு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு இப்பதவிகளில் அவர்கள் நீடிப்பர்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மொத்தமுள்ள 2,236 பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களில் 2,130 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டு தீர்மானங்களை முழுமனதாக ஆதரித்து அங்கீகாரம் தெரிவித்துள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கூட்டாக அறிவித்தனர்.

ஆக அவர்களது அதிகாரபூர்வ செய்தியின் படி, 2017 செப்டம்பர் 12ஆம் தேதி முதல் அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் அதிகாரப் பதவிகள் என வரையறுக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தினகரன் தரப்பால் வழக்கு போடப்பட்டிருக்கிறது. இரட்டை இலைச் சின்னம் தங்களுக்கே என்றும், பொதுச் செயலாளர் சசிகலா என்றும் சொல்லும் அவரது ஆதரவாளர்களால் தேர்தல் ஆணையத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமியும் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.

நிற்க... இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் பொருளாளர் பதவியோ, எடப்பாடி பழனிசாமியின் தலைமைக் கழகச் செயலாளர் பதவியோ பொதுக்குழு தீர்மானத்தின் முன் ஒன்றுக்கும் ஆகாதவை. ஏனென்றால் எல்லா முடிவுகளையும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரே இணைந்து எடுக்க வேண்டும் என்று கட்சியின் சட்ட விதியை திருத்தி தீர்மானம் போட்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த ஒருங்கிணைப்பாளர்கள் பதவி என்பது வெறும் தற்காலிகக் கவசம் என்பது அந்த இருவருக்குமே தெரியும். அதனால்தான் அவர்கள் தத்தமது பழைய கட்சிப் பதவிகளை இழக்க விரும்பவில்லை.

இதையெல்லாம் விட இன்னொரு சுவாரஸ்யம். தாங்கள் கூட்டிய பொதுக்குழுவுக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தரும் மரியாதையை அதிமுக தலைமைக் கழகம் போனாலே நாம் தெரிந்துகொள்ளலாம்.

கடந்த ஜனவரி 5ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் (ரத்து செய்யப்படுவதற்கு முன்) அதிமுக வேட்பாளரைத் தேர்தெடுப்பதற்கான நேர்காணல் நடந்தது. ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் அமர்ந்திருந்த மேடைக்கு பின்புறம், ‘கழகப் பொதுச் செயலாளர்’ என்ற போர்டு அந்த அறைவாசலில் இன்னும் பொருத்தப்பட்டிருக்கிறது. அது ஜெயலலிதா இருக்கும்போது அவருக்கான அறை. அங்கே அவர் அரிதினும் அரிதாக எப்போதாவதுதான் வந்து சென்றார். அந்த அறைவாசலில் கழக பொதுச் செயலாளர் என்ற போர்டு ஜெ. இருந்தபோது வைக்கப்பட்டது.

பொதுக்குழு தீர்மானத்தின்படி பொதுச் செயலாளர் பதவியையே அகற்றிவிட்டார்களே... பொதுச் செயலாளர் என்ற போர்டை ஏன் இவர்களால் அகற்ற முடியவில்லை? இதிலிருந்தே தெரிகிறது அல்லவா...

அடுத்த பொதுக்குழுவுக்குள் தங்களில் ஒருவர் பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்ற போட்டி எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இயல்பாகவே நடக்கிறது. அந்த நிலை வரும்போது தங்களின் ஆதரவு வட்டத்தை அதிகரித்து, பெரும்பான்மையை அடைவதற்கான காய் நகர்த்தல்கள்தான் இப்போது நடைபெற்று வருகின்றன. அதனால்தான் இருவரும் தங்களது பழைய பதவிகளை இழக்க விரும்பவில்லை. ஆகவே, அவர்களால் பொதுச் செயலாளர் என்ற போர்டைக்கூட அகற்ற முடியவில்லை.

அது சரி... அடுத்தபொதுக்குழு எப்போது?

(அடுத்த பயணம் வெள்ளியன்று...)

முந்தைய பகுதிகள் :

மினி தொடர் - 1

மினி தொடர் - 2

மினி தொடர் - 3

மினி தொடர் - 4

மினி தொடர் - 5

மினி தொடர் - 6

மினி தொடர் - 7

மினி தொடர் - 8

மினி தொடர் - 9

வெள்ளி, 11 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon