மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

பல்ஸ் பார்க்கவே திருவாரூர் இடைத் தேர்தல்: ஸ்டாலின்

பல்ஸ் பார்க்கவே திருவாரூர் இடைத் தேர்தல்: ஸ்டாலின்

திருவாரூரில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “18 தொகுதி தேர்தலுக்கு பல்ஸ் பார்க்கவே திருவாரூர் இடைத் தேர்தலை அறிவித்தார்கள்” என்று விமர்சனம் செய்தார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஜனவரி 3ஆம் தேதி தொடங்க இருந்த இக்கூட்டம் சட்டமன்றக் கூட்டத்தொடரால், ஜனவரி 9ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் இன்று (ஜனவரி 9) நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம் என்பதன் அடிப்படையில் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம். உங்களின் பிரச்சினைகளைக் கேட்க இந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ளப் போகிறோம். ஒரு கோவிலுக்கு வந்த உணர்வை நான் பெறுகிறேன். கடவுள் இருக்கக் கூடிய கோவிலை சொல்கிறேன் என்று நீங்கள் கருதிவிடக் கூடாது. கிராமம் என்பது ஒரு கோவில். கிராமம் இல்லையெனில் நகரம், மாநகரம் இல்லை. கிராமங்களில்தான் அரசியலே உருவாகியது. குடவோலை முறை மூலமாகத்தான் அன்றைய தினத்தில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குடவோலை முறை அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்திலும், கலைஞர் பிறந்த பழைய தஞ்சை மாவட்டத்திலும்தான் கல்வெட்டாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “திருவாரூரில் இடைத் தேர்தல் வந்தால் நாம்தான் வெற்றிபெறப் போகிறோம். திருவாரூர் இடைத் தேர்தலுக்கு முன்னதாகவே 18 தொகுதிகளும் காலியாக இருந்துவருகிறது. ஆகவே திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்பட 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் வைத்திருக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் தடை உத்தரவு அளிக்கவில்லை. ஆனால் தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கிறது. இதனால்தான் பல்ஸ் பார்க்கும் விதமாக ஓரவஞ்சனையோடு திட்டமிட்டு திருவாரூருக்கு இடைத் தேர்தலை நடத்தி, தில்லுமுல்லு செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ரத்து என்று தீர்ப்பு வந்துவிட்டால், தேர்தல் ஆணையத்துக்கு அவமானமாகிவிடும் என்று பயந்து, வழக்கு விசாரணையன்று காலை தேர்தல் ரத்து என்று அறிவிப்பு வருகிறது” என்றும் தெரிவித்தார்.

கஜா புயல் பாதிப்பு குறித்து பேசிய ஸ்டாலின், “கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகின என்பது நமக்குத் தெரியும். ஆனால் அதனைப் பற்றி இந்த அரசு கவலைப்படுகிறதா? கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் கஜா புயல் பாதித்த அடுத்த நிமிடம் தஞ்சை, திருவாரூர் பகுதிக்கு வந்து புயல் பாதித்த பகுதிகளை பார்த்திருப்பார். முதல்வராக இருந்தபோது அவர் ஹெலிகாப்டரில் சென்று என்றாவது பார்த்திருக்கிறீர்களா? ஹெலிகாப்டரைப் பார்த்து கும்பிட்டவர்களெல்லாம் தற்போது ஹெலிகாப்டரில் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஆறுதல் சொல்வதற்கு ஹெலிகாப்டரில் வந்து இரண்டு மணி நேரம் சுற்றிப்பார்த்துவிட்டு, மழை வருகிறது என்று சொல்லி திரும்பிச் சென்ற முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். நானும் விவசாயி என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படும் நிலை இருக்கிறது” என்றும் விமர்சனம் செய்தார்.

பின்னர் பொதுமக்களோடு கலந்துரையாடினார் ஸ்டாலின். அப்போது ஒரு பெண் எழுந்து நாட்டுப்புற கலைஞர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். அவரை ஸ்டாலின் பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்க, கலைஞரை புகழ்ந்து பாடல் பாடினார். தொடர்ந்து கோரிக்கைகளை கேட்ட ஸ்டாலினிடம், கஜா புயலால் தங்களது வீடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுபோலவே ஈரோட்டில் நடக்கும் ஊராட்சி சபைக் கூட்டத்தில் துரைமுருகனும், காஞ்சிபுரத்தில் நடக்கும் கூட்டத்தில் டி.ஆர்.பாலுவும் மற்ற மாவட்டங்களில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களும் மாவட்டச் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon