மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

திருடிய இதயத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு!

திருடிய இதயத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு!

வாலி படத்தில் ‘ஏப்ரல் மாதத்தில்’ என்ற பாடலின் வரிகளுக்கு இடையில் “ஹீ ஸ்டோல் மை லிட்டில் ஹார்ட்” என அஜித் மீது சிம்ரன் நீதிபதியிடம் புகாரளிப்பார். அந்த திரைப்படத்தில் வருவது போன்ற சம்பவம் ஒன்று நாக்பூரில் நடந்துள்ளது.

நாக்பூரில் கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 82 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று (ஜனவரி 8) நடைபெற்றது. அப்போது நாக்பூர் காவல் ஆணையர் பூஷன் குமார் உபத்யாய் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“திருடப்பட்ட பொருட்களை நாங்கள் கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைத்து விடுகிறோம். ஆனால், எங்களால் தீர்க்கவே முடியாத சில புகார்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது. சமீபத்தில், நாக்பூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் ‘தனது இதயத்தைப் பெண் ஒருவர் திருடிவிட்டார்’ என்று கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனடியாக போலீசார், மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டனர். இதையடுத்து, இந்தப் புகாரைப் பதிவு செய்வதற்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் எந்தவொரு பிரிவும் கிடையாது. இந்தப் பிரச்சினைக்கு எங்களால் தீர்வு காண முடியாது என போலீசார் அந்த இளைஞரிடம் கூறியுள்ளனர். இதை ஏற்க மறுத்த அவர், எப்படியும் தன் இதயத்தை மீட்டு கொடுக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். கடைசியாக, அந்த இளைஞரைச் சமாதானப்படுத்தி திரும்ப அனுப்பியுள்ளனர் போலீசார்” என்று தெரிவித்தார்.

‘திருடிய இதயத்தைக் கண்டுபிடித்துத் தருமாறு’ நாக்பூரைச் சேர்ந்த இளைஞர் புகார் அளித்துள்ள சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon