மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

அரசு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

அரசு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து அதிகாரிகள் நீதிமன்றத்துடன் விளையாடக் கூடாது என்று கண்டனம் தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

கரூர் மாவட்டம் தோரணக்கால்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றைத் தொடர்ந்தார். கரூர் நகராட்சிக்கான புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான அரசாணையை அரசு அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

“2013ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் கரூர் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக நான் தொடர்ந்த வழக்கில், 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அந்த உத்தரவில், இரண்டு மாதங்களுக்குள்ளாகப் புதிய பேருந்து நிலையம் கட்டும் அரசாணையைச் செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று தெரிவித்தது. ஆனால் அரசு அதிகாரிகள் அவ்வாறு செயல்படவில்லை. எனவே, நீதிமன்ற அவமதிப்பின்கீழ் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சரவணன் தனது மனுவில் கோரியிருந்தார்.

இன்று (ஜனவரி 9) இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு அதிகாரிகள் நீதிமன்றத்துடன் விளையாடக் கூடாது என்று கண்டனம் தெரிவித்தது நீதிமன்றம். “அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் கைகோர்க்காமல் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். ஆட்சியாளர்கள் மாறினாலும் அரசு அதிகாரிகள் மாறமாட்டார்கள். மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, அரசு அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon