மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

இடஒதுக்கீடு: பொருளாதார அடிப்படை எனும் அபத்தம்! - ராஜன் குறை

இடஒதுக்கீடு: பொருளாதார அடிப்படை எனும் அபத்தம்! - ராஜன் குறை

சுதந்திரவாதம் (லிபரலிசம்) என்ற கோட்பாட்டின் அடிப்படை தனிநபர் சுதந்திரம். ஒரு நபர் தன்னுடைய விருப்பம், மனோதர்மம் அகியவற்றின் அடிப்படையில் விரும்பியபடி வாழ அனுமதிப்பது சுதந்திரவாதம். அத்தகைய சுதந்திர மனிதர்கள் ஒரு அரசை உருவாக்கி, அதன் மூலம் தங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் ஒருசில சட்ட திட்டங்களை அனைவருக்கும் பொதுவானதாக உருவாக்கிக்கொள்வார்கள். அவற்றை நாடாளுமன்றங்களில் விவாதித்து மாற்றியமைத்துக்கொள்வார்கள். அது எத்தகைய சட்டம் ஆனாலும் அது அனைவரையும் சமமாகவே மதிக்கும். அப்போதுதான் தனிநபர்கள் அனைவரும் அந்த அரசின் பங்குதாரர்களாக, குடிநபர்களாக (சிட்டிசன்) இருக்க முடியும். யாரும் யாருக்கும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் கிடையாது.

இத்தகைய தனிநபர்கள் அவர்கள் உருவாக்கும் அரசின் சட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களே தவிர, ஊர்க் கட்டுமானங்கள், சாதி, இன, பாலியில் பேதங்களை நடைமுறைத்தும் பஞ்சாயத்துக்கள், கட்ட பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றிற்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்க முடியாது; கூடாது. எல்லாத் தனிநபர்களுமே, அடையாளமற்ற சம மதிப்புள்ள குடிநபர்கள் என்பதால்தான் அனைவரும் தேர்தலில் ஒரு வாக்களித்து ‘ஒரு விரல் புரட்சி’ செய்கிறார்கள்.

சுதந்திரவாதத் தத்துவத்தில் சமத்துவம் என்பது சம வாய்ப்பு, சமமான சமூக மதிப்பு ஆகியவையே. தனிநபர்களுக்குச் சொத்துரிமை உண்டு; அவர்கள் சொத்து அவர்கள் வாரிசுகளையே சேரும். அந்தச் சொத்தை அவர்கள் சுதந்திரமாக ஆண்டு, அனுபவிக்கலாம், விற்கலாம். ஒருவர் தன் உழைப்பாலும், திறன்களாலும் பொருள் ஈட்டிச் செல்வந்தர் ஆகலாம்; மற்றொருவர் அவரது திறன் இன்மை அல்லது சூழ்நிலை காரணமாகப் பொருளை இழக்கலாம். அரசாங்கம் வறியவர்களுக்குச் சில உதவிகள் செய்யலாம். இலவச மருத்துவம், கல்வி, உணவுப் பொருட்கள், சில அத்தியாவசியக் கருவிகள் ஆகியவற்றை அனைவருக்குமோ அல்லது வறியவர்களுக்கோ வழங்கலாம்.

இவற்றையெல்லாம் செய்தாலும் சமத்துவம் என்பது பொருளாதாரச் சமத்துவம் என்று பொருள்படாது. தனிநபர் வருவாயோ செல்வமோ அவர்களது தனிநபர், பரம்பரை பொருள் சேர்ப்பின் அடிப்படையில் இருக்கும். அதற்கு ஏற்றபடி அவர்கள் அரசிற்கு வரிகளைச் செலுத்த வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் சுதந்திரவாதத்தில் சமத்துவம் என்பது உரிமைகள் தொடர்புடையதே தவிர, பொருளாதரம் தொடர்புடையது அல்ல. “எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று இந்தத் தத்துவத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வது வழக்கம்.

சுதந்திரவாத்தில் இட ஒதுக்கீடு எப்படிச் சாத்தியமாகிறது?

இத்தகைய சுதந்திரவாத அரசியல் அமைப்பு தோன்றுவதற்கு முன்னர் இந்திய சமூகம் சாதிய ஏற்றத்தாழ்வுகளால் உருவாக்கப்பட்டது. மேற்கில் இன வேற்றுமை சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. இந்த ஏற்றத்தாழ்வுகள் பொருளாதார அடிப்படையில் அமைந்தவை அல்ல. இவை சமூகத்தைச் சாதிகளாக, இனமாகப் பிரித்து அதன் அடிப்படையில் சில குழுக்களுக்கு, சாதிகளுக்கு, இனங்களுக்குச் சம உரிமைகளை மறுத்ததால், சுதந்திர இயக்கத்தை மறுத்ததால் உருவான ஏற்றத்தாழ்வு. இதன் காரணமாக அவர்கள் வறியவர்களாக இருக்கலாம். ஆனால், இந்த வறுமையின் சாராம்சம் சமூக அடையாளத்தின் அடிப்படையில் உரிமைகள் அற்றவர்களாக, சுதந்திரம் அற்றவர்களாக அடிமைப்படுத்தப்பட்டனர் என்பதே.

இந்திய சாதிச் சமூகத்தில் உழைப்புப் பிரிவினையை எந்தக் குலத்தில் பிறந்தவர் என்பதன் அடிப்படையில் தீர்மானித்தார்கள். “சாதி என்பது உழைப்புப் பிரிவினை அல்ல; உழைப்பாளர் பிரிவினை” என்று பொட்டிலடித்தாற்போல கூறினார் அம்பேத்கர். உழவன் மகன் உழவன்; நாவிதன் மகன் நாவிதன்; வண்ணான் மகன் வண்ணான்; பூசாரி மகன் பூசாரி என்று பிறப்பின் அடிப்படையில் தொழிலையும் மொத்த வாழ்க்கையையும் தீர்மானித்தது சாதிச் சமூகம். இது சுதந்திரவாதத்திற்கு முற்றிலும் எதிரான சமூக அமைப்பாகும். தனிநபர் சுதந்திரம் என்ற பேச்சிற்கே சாதிச் சமூகத்தில் இடம் இல்லை. குடிநபர் என்ற கருத்தாக்கமே சாத்தியமில்லை.

இதனால்தான் சுதந்திரவாத அரசியல், சாதி ஏற்றத்தாழ்வினை மிகப் பெரிய சாபமாக, எதிரியாக, நில உடமைகால அதிகார அமைப்பின் எச்சமாகப் பார்த்து “குலத் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்” என்று கண்டித்தது. அப்படியானால் அனைவருக்கும் சாதி அடையாளம் இல்லை என்று கூறிவிட்டால் போதுமா என்றால் அங்கேதான் ஒரு புதிய சிக்கல் உருவாகிறது.

எல்லோருக்கும் சம உரிமை என்று சொல்லலாம். ஆனால் காலம் காலமாகக் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். கல்வி கற்கும் உரிமை பெற்ற சமூகத்தினருடன் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஒரு சில ஆதிக்கச் சாதிகளுக்குப் பொருளாதார மூலதனம் போன்றே, கலாச்சார மூலதனம் என்பதும் சாத்தியமாக இருந்தது. உதாரணமாக, பார்ப்பனச் சமூகம் பன்னெடுங்காலமாகக் கணக்கர்களாக, ஆசிரியர்களாக, அரசின் விதிகளையும் தர்ம சாஸ்திரங்களையும் நூல்களாக வடிவமைப்பவர்களாக, போதிப்பவர்களாக விளங்கியவர்கள். அவர்களால் சுலபமாக நவீன சமூகத்தில் அரசுப் பதவிகளை இட்டு நிரப்ப முடிந்தது; முடிகிறது. பன்னெடுங்காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்ட நாவிதர்களோ, வண்ணார்களோ இவர்களுடன் போட்டியிட்டு எப்படி அரசுப் பதவிகளைப் பெற முடியும்? கல்வி சாத்தியமற்று இருந்த உழவுக் குடிகள் எப்படி திடீரெனத் தேர்வுகளை எழுதிக் கல்வி கற்கும் வாய்ப்பினைப் பெற முடியும்?

இந்த நிலையை மாற்றி எல்லோரும் ஓர் நிறை என உருவாக்க வேண்டுமானால், இவ்வாறு உரிமை மறுக்கப்பட்ட சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி அவர்களையும் நவீன கல்வியும், பல்வேறு திறன்களும் அடைய வழிவகை செய்தால்தான் சம உரிமை என்ற சுதந்திரவாத கோட்பாட்டிற்குப் பொருள் இருக்கும் என்பதை அனைவரும் உணர்ந்தனர். அதானாலேயே இட ஒதுக்கீடு என்ற கருத்தாக்கம் உருவானது.

பொருளாதார ஏற்றத்தாழ்வை என்ன செய்வது?

பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது உரிமை மறுப்பினால் உருவாவது அல்ல. உரிமை மறுக்கப்பட்டவர்கள் வறியவர்களாக இருக்கலாம்; ஆனால் எல்லா வறியவர்களும் உரிமை மறுக்கப்பட்டவர்கள் அல்ல.

உதாரணமாக, இரண்டு பார்ப்பனர்கள் வங்கி அதிகாரி பதவிக்கான தேர்வினை எழுதுகிறார்கள். ஒருவர் வெற்றி பெறுகிறார். மற்றவர் அந்த வேலை கிடைக்காமல் வணிக நிறுவனமொன்றில் குறைந்த வருவாயில் வேலைக்குச் செல்கிறார்.

முப்பதாண்டுகள் கழித்து வங்கி அதிகாரி பெரும் செல்வந்தர் ஆகிறார். இரண்டாமவர் வறுமையில் இருக்கிறார். இப்போது வங்கி அதிகாரியின் மகளும், வறியவரின் மகளும் ஐஏஎஸ் தேர்வு எழுதுகிறார்கள். வறியவரின் மகள் குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற தீவிர லட்சியத்துடன் படித்து வெற்றி பெறுகிறார். வங்கி அதிகாரியின் மகள், வசதியாக வாழ்பவர், ஊக்கமின்றிப் படித்து தோல்வி அடைகிறார்.

அடுத்த இருபதாண்டுகள் கழித்து இந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலை மீண்டும் மாற்றமடைகிறது. வறிய குடும்பம் செல்வ வளம் மிக்கதாகிறது. செல்வ வளம் இருந்த குடும்பம் சில சூழ்நிலைகளால் வளம் குன்றுகிறது. இதையெல்லாம் சூர்ய வம்சம் படம் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம்.

வளம் நிறைந்தவர், வறியவர் இருவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டது என்பதுதான் இங்கே முக்கியமான அம்சம்.

உலக வரலாற்றில் சம வாய்ப்புள்ளவர்கள் போட்டியிடுவதும், வெல்வதும், தோற்பதும், வளம் பெறுவதும், வறியவர் ஆவதும் ஒரு சுழற்சியாகக் காணக் கிடைக்கிறது. சுதந்திரவாத அரசியலின் லட்சியம் என்பது அனைவருக்கும் சம வாய்ய்ப்பினை உருவாக்குவதுதானே அன்றி, அனைவருக்கும் ஒரே வருவாய், பொருளாதார நிலை என்று கட்டாயமாக்குவது அல்ல. அவ்விதம் செய்தால் ஊக்கம் குன்றி மனிதர்கள் தங்கள் ஆற்றல்களைச் சரிவர பயன்படுத்த மாட்டார்கள் என்பதே சுதந்திரவாத அணுகுமுறை.

ரஷ்யாவில் பெரஸ்தொரெய்கா என்ற கொள்கை மாற்றத்தை கோர்ப்பச்சேவ் கொண்டுவந்தபோது ரஷிய அனுபவமாகக் குறிப்பிட்டது இதைத்தான். சீனாவிலும் இன்று வருவாயில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது.

சுதந்திரவாதம் அதற்காக வறியவர்களைப் பற்றி கவலையில்லாமல், இரக்கமில்லாமல் இயங்குவதல்ல. அரசு மக்கள் நல அரசாக இருந்து வறியவர்களைப் பாதுகாக்க வேண்டும். இலவச அரிசி போன்ற திட்டங்களால் பசிப்பிணியை ஒழிக்க வேண்டும். மருத்துவ வசதி, கல்வி போன்றவை இலவசமாகக் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட வேண்டும்.

சம உரிமை மறுப்பும், வறுமையும்

இட ஒதுக்கீடு என்பது சம உரிமை மறுக்கப்பட்ட சமூக குழுக்களைச் சம வாய்ப்புள்ளவர்களாக மாற்றுவதற்காக உருவானது. இதனுடன் பொருளாதார ஏற்றத்தாழ்வை இணைப்பது என்பது சுதந்திரவாதத்தைக் குழி தோண்டிப் புதைப்பதாகும்.

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வருவாய் அடிப்படையில் இட ஒதுக்கீடு உண்டு என்றால், ஒரு தனிநபர் நான் ஏழையாக இருந்தால் என் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று யோசித்தால் அவருடைய செயலூக்கம் என்ன ஆகும்? அரசே சோம்பலை ஊக்குவிப்பதாக மாறாதா?

இலவச அரிசி போன்ற மக்கள் நல திட்டங்கள் மக்களை சோம்பலுக்கு உள்ளாக்குவதாக புலம்பும் குடிமைச் சமூக மேதாவிகள், இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையைப் புகுத்துவது என்பது எத்தகைய நயவஞ்சகம் என்பதை நாம் அரசியல் தத்துவ அடிப்படையில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

சம உரிமை மறுக்கப்பட சமூகக் குழுக்களுக்கே, சாதிகளுக்கே இட ஒதுக்கீடு. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குதல் சமூக நீதிக்கு மட்டும் சாவு மணியல்ல. சுதந்திரவாத அரசியலுக்கே சாவு மணி அடிப்பதாகும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

வறுமை என்பது சம உரிமை மறுப்பு அல்ல. வறியவர்கள் தங்கள் செயலூக்கத்தால் பொருளாதார வளத்தைப் பெறுவது என்பதே சமூக இயக்கம், அதுவே சுதந்திரவாத அரசியலின் அடிப்படை. எனவே வறுமைக்கும் இட ஒதுக்கீட்டிற்கும் எந்த தொடர்பையும் ஏற்படுத்த முடியாது. அத்தகைய முயற்சிகள் அரசியல் அபத்தங்கள் என்றே காணப்பட வேண்டும்.

(கட்டுரையாளர் : ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon