மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம்!

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம்!

பொங்கல் சிறப்புப் பேருந்துகளுக்கான 30 முன்பதிவு மையங்களில் முன்பதிவு தொடங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகைக்கு மக்கள் வெளியூர்களுக்குச் செல்வதற்கு வசதியாக, தமிழக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக ஜனவரி 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையிலிருந்து 14,263 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான முன்பதிவு மையங்களை, இன்று (ஜனவரி 9) கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். கோயம்பேட்டில் 26 கவுண்டர்களும், தாம்பரம் சானிடோரியத்தில் இரண்டு கவுண்டர்களும், பூந்தமல்லி, மாதவரம் ஆகிய இடங்களில் தலா ஒன்று என 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன.

இது குறித்து அமைச்சர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், “சென்னையில் மொத்தம் 30 முன்பதிவு மையங்கள் இன்று முதல் செயல்படும். ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், புதுச்சேரி, ஈ.சி.ஆர். வழியாகச் செல்லும் பேருந்துகள் கே.கே.நகரில் இருந்தும், வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஊர்களுக்குப் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும், தென்மாவட்டங்களுக்குக் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

அதேபோல, பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் மீண்டும் சென்னை திரும்புவதற்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சுங்கச் சாவடிகளில் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கப் போக்குவரத்து ஆய்வாளர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவர். ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் 1800 4256 151 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்தார்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon