மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜன 2019

நீங்கள் மட்டுமே காரணம் அல்ல! - காம்கேர் கே.புவனேஸ்வரி

நீங்கள் மட்டுமே காரணம் அல்ல! - காம்கேர் கே.புவனேஸ்வரி

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? பகுதி - 5

வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நம் மீதான நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. நம் ஒவ்வொருவருக்கும் பிடித்த சாப்பாடு, பிடித்த உடை, பிடித்த சினிமா, பிடித்த சப்ஜெக்ட், பிடித்த சுற்றுலா தலம் என்று இருப்பதைப் போல நமக்கு மிகவும் பிடித்த நம் திறமை ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். தேடிக் கண்டுபிடித்தாவது வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தன்னம்பிக்கை தானாக நமக்குள் ஏற்படும். தைரியத்தைக் கொடுக்கும்.

ஒரு சிங்கம் இருந்ததாம்…

சவால்கள் நிறைந்ததும், ஏற்றத்தாழ்வுகள் கொண்டதும்தான் வாழ்க்கை. சிறு குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்வதாக வைத்துக்கொள்வோம். ஒரு காட்டில் ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது. ஓர் ஆடு குடும்பத்தோடு வசித்து வந்தது. ஒரு யானை தன் குட்டியோடு தண்ணீர் குடித்தது என்று கதை சொல்லிக்கொண்டிருந்தால் கேட்கும் குழந்தைகளுக்கு போர் அடித்துவிடும்.

ஒரு நாள் சிங்கத்துக்கு அகோரப் பசி… அந்தச் சமயம் ஓர் குட்டி ஆடு அம்மா ஆட்டைவிட்டு விலகிச் சென்று ஓர் இடத்தில் துள்ளி விளையாடிக்கொண்டிருந்ததாம்…. அப்போது சிங்கம் என்ன செய்ததாம்…. அந்த ஆட்டுக்குட்டியைத் துரத்தியதாம்… அந்த ஆட்டுக்குட்டி கத்திக்கொண்டே யானையிடம் தஞ்சம் அடைந்ததாம்… அந்த யானை சிங்கத்தை தன் தும்பிக்கையால் வீசிப் பிடித்து மடக்கி தூக்கி எறிந்ததாம்… திரும்பவும் சிங்கம் வந்ததாம்… யானைக்கும் சிங்கத்துக்கும் சண்டை வந்ததாம்… இதற்கிடையில் ஆட்டுக்குட்டி தன் அம்மாவிடம் ஓடிச் சென்று சரண் அடைந்ததாம்…. அப்போது அம்மா ஆடு ‘ஒரு குறிப்பிட்ட வயது வரும்வரை அம்மாவைவிட்டு எங்கும் தனியாகச் செல்லக் கூடாது’ என்று அறிவுரை சொன்னதாம்… குட்டி ஆடு திருந்தியதாம்.

இப்படி, ஒரு கதையில் அழகு, அமைதி, சண்டை, சச்சரவு, போராட்டம், பாதுகாப்பு என அனைத்தும் இருந்தால்தான் குழந்தைகள் ஆர்வமாகக் கதையைக் கேட்பார்கள்.

அதுபோலதான் வாழ்க்கையும். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தால் சலிப்புத்தான் மிஞ்சும். பிரச்சினைகள் வந்தால் அதை எதிர்கொள்ளப் பழக வேண்டும். அதுதான் வாழ்வியல் கல்வி.

நம் படிப்பு, நம் திறமை, நம் பெற்றோர், நம் ஆசிரியர்கள், நம்பிக்கையான பெரியோர்கள், நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்ட சக நண்பர்கள், கூடவே இறை நம்பிக்கை... இவை இருந்துவிட்டால் வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.

மதிப்பெண் குறைவு, தேர்வில் தோல்வி, ஈவ் டீசிங்கில் மனம் உடைதல், சோஷியல் நெட்வொர்க்கில் பிளாக் மெயில் போன்ற காரணங்களால் மனம் நிம்மதியைத் தொலைத்து, எதிர்கொள்ள மனதளவில் தைரியம் இல்லாமல் தற்கொலைதான் தீர்வு என முடிவுக்கு வரும் மாணவர்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம்.

இந்த நேரத்தில்தான் நாம் மிகவும் தைரியமாக இருக்க வேண்டும். அதற்கான சக்தி நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு உண்டு. எந்தச் சூழலையும் எதிர்கொள்ளலாம் என்ற மனதைரியத்தை வளர்த்துக்கொண்டால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்.

நீங்கள் ஒரு போட்டியில் ஜெயிக்கிறீர்கள் அல்லது பள்ளி இறுதித் தேர்வில் பள்ளியில் முதலாவதாக வருகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இதற்கு நீங்கள் மட்டுமா காரணம்… இல்லையே! உங்கள் அப்பா அம்மா, கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள், ஊக்கம் கொடுத்த நண்பர்கள், பள்ளிச் சூழல், உங்கள் உடல்நிலை, மனநிலை, இயற்கை…

இப்படி உங்கள் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும்போது தோல்விக்கு மட்டும் நீங்கள் மட்டுமே எப்படிக் காரணமாக இருக்க முடியும்? தோல்விக்கும் மேலே சொன்ன அத்தனையையும் காரணங்களாகச் சொல்லலாமே.

வாழ்க்கையில் உங்களுக்கு நடக்கும் நல்லவற்றுக்கும், நல்லவை அல்லாதவற்றுக்கும் நீங்கள் மட்டுமே காரணம் அல்ல. நீங்கள் ஒரு கருவி மட்டுமே. அது சரியாக இயங்குவதற்குப் பல காரணிகள் உங்களைச் சுற்றி இயங்குவதால் எந்த நேரத்திலும் நம்பிக்கை இழந்துவிடாமல் பாசிடிவ்வாக வாழ்க்கையை அணுக முயற்சி செய்யுங்கள்.

கற்போம்... கற்பிப்போம்!

(தொடரின் அடுத்த பகுதி வரும் வெள்ளி அன்று...)

(கட்டுரையாளர் : காம்கேர் கே.புவனேஸ்வரி - காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் என்னும் ஐடி நிறுவனத்தின் CEO. நிர்வாகி, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் எனப் பன்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆகக் கடந்த 25 ஆண்டுக்கும் மேலாகச் செயல்பட்டுவருகிறார். தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியல் குறித்த 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும் தொழில்நுட்பப் புத்தகங்களும் பல கல்லூரிகளில் பாடத்திட்டமாக உள்ளன. இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

முந்தைய பகுதிகள் :

பகுதி - 1 : உங்கள் திறமை எது என்று அறிவீர்களா?

பகுதி - 2 : கடமையும் விருப்பமும்!

பகுதி - 3 : ஹாபியே வேலையானால்…!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

புதன் 9 ஜன 2019