மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

திசைதிருப்பவே 10% இட ஒதுக்கீடு: தம்பிதுரை

திசைதிருப்பவே 10% இட ஒதுக்கீடு: தம்பிதுரை

திசைதிருப்புவதற்காகவே 10 சதவிகித இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவருவதாக தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப் பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று (ஜனவரி 8) நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய மக்களவைத் துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை, மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். தம்பிதுரையின் பேச்சு சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்றது.

இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 9) செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “சமூக நீதி அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு வேண்டுமே தவிர பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தந்தால் ஊழலும், குழப்பமும், அநீதியும்தான் வரும் என்பது அதிமுகவின் எண்ணம். சாதியை ஒழிக்க வேண்டும், மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் திராவிட இயக்கம் உருவாகியது. வருணாசிரம அடிப்படையில் பார்த்தால் நாமெல்லாம் சூத்திரர்கள். அரசியல் சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் போன்ற முன்னோடிகள், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்றும், சாதி வேற்றுமைகளை களையவும் இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தார்கள்” என்றும் தெரிவித்தார்.

மேலும், “பிரதமர் மோடி உள்பட மற்ற மாநிலங்களில் உள்ளோரின் பெயருக்கு பின்னால் சாதி பெயரைப் போடும் வழக்கம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் அது இல்லை. இட ஒதுக்கீட்டுக்காக ஜாட், படேல், மராத்தா சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் போராடி வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதை விட்டுவிட்டு, இதனை திசை திருப்புவதற்காகவே பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்க மசோதா தாக்கல் செய்துள்ளனர். 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பாதிப்பை ஏற்படுத்தும்” என்றும் தெரிவித்தார்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon