மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

இந்தியர் உயிரிழப்பு: ட்ரம்ப் இரங்கல்!

இந்தியர் உயிரிழப்பு: ட்ரம்ப் இரங்கல்!

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க போலீஸ் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - மெக்சிகோ இடையே நிகழும் சட்டவிரோதக் குடியேற்றங்களைத் தடுக்க, இரு நாடுகளுக்கும் இடையே சுவர் கட்ட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். தனது தேர்தல் பிரசாரத்தின்போது, அவர் இதையே வாக்குறுதியாகவும் மக்களிடம் வெளிப்படுத்தினார். சட்ட விரோதமாக மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு மக்கள் இடம்பெயர்வது, பல ஆண்டுகளாக மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.

இதனைத் தடுக்கும் வகையில், அமெரிக்கா - மெக்சிகோ எல்லைப் பகுதியில் சுமார் 1,552 கிலோமீட்டர் தூரத்துக்கு சுவர் எழுப்பும் பணி நடந்து வருகிறது. இது, வரும் 2027ஆம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மெக்சிகோ சுவர் பிரச்சினையில் பலியான அமெரிக்கக் காவலர் ஒருவரை நினைவுகூர்ந்தார்.

கடந்த டிசம்பர் 26ஆம் தேதியன்று, காவலர் ரோனில் சிங் போக்குவரத்தைச் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது, மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாகப் புகுந்த கஸ்தாவே பெரஸ் என்பவர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். 33 வயதான ரோனில் சிங், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

“ரோனில் உயிரிழப்பு அமெரிக்க மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. அமெரிக்க வீரனான ரோனில் உயிர், இந்த நாட்டின் மீது சற்றும் உரிமை இல்லாத, சட்டவிரோதமாகக் குடியேறிய ஒருவரால் பறிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார் ட்ரம்ப். அதோடு, மெக்சிகோ எல்லையில் சுவர் அமைப்பது அமெரிக்கா நாட்டின் மிக முக்கியமான பிரச்சினை என்றும் கூறினார்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon