மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

வேகமான வளர்ச்சி: இந்தியா முன்னிலை!

வேகமான வளர்ச்சி: இந்தியா முன்னிலை!

நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால், சர்வதேச அளவில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வேலைவாய்ப்பு உருவாக்கம், இந்தியப் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் பின்னடைவு ஏற்பட்டால் அது மோடி அரசுக்கு எதிரான அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற சூழலில் ஜனவரி 7ஆம் தேதி இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கண்ணோட்டத்தை மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நடப்பு 2018 - 2019 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது முன்னதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த மதிப்பீட்டை (7.4%) விட சற்றுக் குறைவுதான். எனினும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் உலகின் மிக வேகமான வளர்ச்சியைக் கொண்ட பொருளாதாரம் என்ற பெயரை இந்தியா தனதாக்கிக்கொள்ளும் என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளரான சுபாஷ் சந்திர கார்க், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரையில், உற்பத்தித் துறை 8.3 சதவிகித வளர்ச்சியையும், கட்டுமானத் துறை 8.9 சதவிகித வளர்ச்சியையும், வேளாண் துறை 3.8 சதவிகித வளர்ச்சியையும் கொண்டிருக்கும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனியார் துறை நுகர்வு 6.6 சதவிகிதத்திலிருந்து 6.4 சதவிகிதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் இந்திய வளர்ச்சிக்கு இது சற்று சவாலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon