மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

தேர்தல் பிரச்சாரம்: ராகுலின் ராஜஸ்தான் சென்டிமென்ட்!

தேர்தல் பிரச்சாரம்: ராகுலின் ராஜஸ்தான் சென்டிமென்ட்!

அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் ஜெயித்த ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து இன்று ஜனவரி 9 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமென்று காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படியே மேற்கண்ட மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்காக இன்று ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் விவசாயிகள் சார்பில் நன்றி அறிவிப்புப் பேரணி பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். இந்தப் பேரணியையே எதிர்வரும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக ராகுல் காந்தி பயன்படுத்துகிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சிப் பொதுச் செயலாளரும், ராஜஸ்தான் பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டே இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராஜஸ்தான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிவிட்டது. இதேபோல மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் அளிக்கும் வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்து நிச்சயம் நிறைவேற்றும். இந்த செய்தியை ராஜஸ்தான் மூலமாக இந்தியா முழுமைக்கும் இன்று ராகுல் காந்தி சொல்கிறார். எனவே இது மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாகவே அமையும்” என்று குறிப்பிட்டார்.

ஏற்கனவே ரஃபேல் போர் விமான பிரச்சினையை பாஜக அரசுக்கு எதிராகக் கடுமையாக விமர்சித்து வரும் ராகுல் காந்தி, அதற்கு இணையாக விவசாயிகள் பிரச்சினையையும் எழுப்பி வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தான் போல இந்தியா முழுமைக்கும் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்று அறிவிக்கும் திட்டமும் ராகுலிடம் இருக்கிறது. அதன் முதல்கட்டமாகத்தான் சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் ஜெயித்த ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 2019 மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்குகிறார் ராகுல்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon