மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

திமுக தாக்குதல்: தினகரன் மகிழ்ச்சி!

திமுக தாக்குதல்: தினகரன் மகிழ்ச்சி!

இதுவரை அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருந்த திமுக, நேற்று (ஜனவரி 8) முரசொலி தலையங்கத்தின் மூலம் தினகரனை கடுமையாக சாடியிருக்கிறது.

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த தினகரன், “ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் தேர்தலைப் பார்த்து பயப்படுகின்றன. நான் ஒரு சுயேச்சை கட்சியாக தைரியமாக நிற்கிறேன். ஆனால் திமுகவுக்கு ஏன் பயம்? டி.ராஜாவை விட்டு வழக்கு போடச் சொல்கிறார்கள். திருமாவளவன், கி.வீரமணி ஆகியோரை விட்டு பேச வைக்கிறார்கள்’ என்றெல்லாம் தாக்கினார்.

வழக்கமாக இதுபோன்ற தினகரனின் தாக்குதல்களை கண்டுகொள்ளாமல் போய்விடும் திமுக தலைவர் ஸ்டாலின், ஓரிரு நாட்கள் முன்பு சென்னை விமான நிலையத்தில் தினகரனைக் குறித்து வறுத்தெடுத்துவிட்டார். இருபது ரூபாய் தினகரன் என்றும் அவர் அழைத்தார்.

இது போதாதென்று நேற்று (ஜனவரி 8) திமுக நாளேடான முரசொலியில் 20... 120... 420 என்ற தலைப்பிட்டு தினகரனைக் கடுமையாகச் சாடி முரசொலி தலையங்கத்தில் எழுதியிருந்தது திமுக.

இதைப் படித்த தினகரன், “நம்மளப் பார்த்து பயப்படுறாங்கன்றது உறுதியாயிடுச்சு. இதுவரை நம்மை கண்டுக்காம இருந்த திமுக இவ்வளவு தீவிரமா திட்டுதுன்னா நாமதான் அவங்களுக்கு அச்சுறுத்தல். நாம திமுகவோட கூட்டணினு சொல்லிக்கிட்டிருந்த அமைச்சர்களுக்கும் முரசொலியே பதில் சொல்லிவிட்டது’ என்று சொல்லியிருக்கிறார். கூடவே, நேற்று இரவு ட்விட்டரில் ஸ்டாலினைக் கடுமையாகத் தாக்கி இதற்கு பதிலும் கூறியிருக்கிறார் தினகரன்.

அயிரை மீன் அளவு இருக்கும் தினகரன் விலாங்கு மீன் போல சேட்டை செய்வதாக திமுக சாட, அதற்கு ஸ்டாலினை அரா மீனோடு ஒப்பிட்டு தினகரன் சொல்லியிருக்கும் பதில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் பேருதவியாக இருக்கிறது.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon