மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஆதரவாக தமிழிசை

பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஆதரவாக தமிழிசை

“பாலகிருஷ்ண ரெட்டி மக்களுக்காகத்தான் போராடினார், தாமதமான தீர்ப்பு அவருக்கு பாதகமாக அமைந்துவிட்டது” என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

1998ஆம் ஆண்டு ஒசூர் அருகே உள்ள பாசனூர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையைத் தடை செய்யக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 20 வருடங்களுக்கு மேலாக நடந்துகொண்டிருந்த இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து பாலகிருஷ்ண ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று (ஜனவரி 8) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், “பாலகிருஷ்ண ரெட்டி மக்களுக்காகவே போராடினார். தாமதமான தீர்ப்பு அவருக்கு பாதகமாக அமைந்துள்ளது வருந்தத்தக்கதே. பாலகிருஷ்ண ரெட்டி தனது வழக்கை முறையாகக் கையாண்டிருக்க வேண்டும். வழக்கை விரைவாக விசாரிக்காமல் தாமதமானது குறித்து நீதிமன்றம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நிலையும் உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து பேசிய தமிழிசை, “பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பாஜக மக்களுக்கான திட்டத்தை செய்து வருகிறது. அரை நூற்றாண்டு காலமாக எதிர்பார்க்கப்பட்ட திட்டம் இது. பாஜக மக்களுக்கான திட்டங்களைத்தான் நிறைவேற்றிவருகிறது. தேர்தலுக்காகக் கொண்டுவரவில்லை. எப்போது அறிவிப்பு வந்தாலும் ஏதாவது ஒரு தேர்தல் இருந்துகொண்டுதான் இருக்கும்” என்றும் விளக்கினார்.

செவ்வாய், 8 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon