மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

விஸ்வாசத்துக்கு விலக்கு, பேட்டக்குத் தடையா?

விஸ்வாசத்துக்கு விலக்கு, பேட்டக்குத் தடையா?

தமிழ் சினிமாவில் இப்போதைய தலைப்பு செய்தி முதலில் திரையிடப்படும் படம் விஸ்வாசமா அல்லது பேட்டயா என்பதுதான்.

முதல் சுற்றில் விஸ்வாசம் விறு விறு என முன்னேறிக் கொண்டிருக்கிறது. சென்னை காசி டாக்கீஸ், கோயம்பேடு ரோகிணி திரையரங்குகளில் அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வாசம் படம் திரையிடுவது உறுதியாகியிருக்கிறது. அதற்கான டிக்கட்டுகள் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டது. பேட்ட காலை 8 மணிக்குப் பின்தான் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாகக் கூறுகின்றனர்.

தியேட்டர் வட்டாரத்தில் ஏன் இந்தப் பாரபட்சம் என விசாரித்தபோது, “அஜித், அம்மாவோட (ஜெயலலிதா) ஆளு. அதனால், விஸ்வாசம் படத்தைத் திரையிடும் திரைகளில் கெடுபிடி காட்ட வேண்டாம்” என தமிழக அரசு தரப்பில் அதிகாரபூர்வமற்ற முறையில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக ஜனவரி10 அன்று ரிலீஸ் ஆகும் படங்களுக்கு ஐந்து காட்சிகள் திரையிடத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு என்ன உத்தரவு பிறப்பித்தாலும் அதைக் கடைப்பிடிப்பது இல்லை என்பதை அடிப்படை கொள்கையாக தியேட்டர் உரிமையாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

முன்பெல்லாம் சிறப்புக் காட்சி, கூடுதல் காட்சி என்று இருந்ததைக் காலைக்காட்சியாக (6 மணி) மாற்றியது சென்னை நகரில் இருக்கும் திரையரங்குகள்தான்.

புதிய படங்களை இயல்பாகத் திரையிடுவதில் இருந்து மாறி, குறுகிய நாட்களுக்குள் அதிக வசூல் செய்யும் போக்கு திரையரங்குகள் மத்தியில் வளர்ந்தது இன்று விஸ்வாசம் படம் நள்ளிரவு 1.30 மணிக்குத் திரையிடுவது வரை வந்துள்ளது. இது தவறான நடைமுறை என்பதுடன், அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தக்கூடியது. அதிகாலை 1.30க்குப் படம் திரையிடுவது தேவையற்ற சர்ச்சைகள் எழக் காரணமாகும் என்கின்றனர் திரைத் துறை சார்ந்த விமர்சகர்கள்.

செவ்வாய், 8 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon