மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

பொது வேலைநிறுத்தம்: மோடி அரசின் மீது தொழிலாளர்களின் அவநம்பிக்கை!

பொது வேலைநிறுத்தம்: மோடி அரசின் மீது தொழிலாளர்களின் அவநம்பிக்கை!

பா.சிவராமன்

8 - 9 ஜனவரி பொது வேலைநிறுத்தத்தின் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்குமா?

தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக ஒரு பொது வேலைநிறுத்தம், அதுவும் இரண்டு நாட்களுக்கு, நடைபெறுமானால் அது டெக்னிக்கலாக முழு வெற்றியடைந்தாலும் அடையாவிட்டாலும் அதற்கெனச் சிறப்பு முக்கியத்துவம் இருந்தே தீரும். எனவேதான் சர்வதேச ஊடகங்கள்கூட இந்தியாவில் ஆலைத் தொழிலாளர், அரசு ஊழியர், அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் ஆதரிக்கும் விவசாயிகள் எனச் சுமார் 20 கோடிப் பேர் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தனர் என தலைப்புச் செய்திகளை வெளியிட்டனர்.

முதல் நாள் வேலைநிறுத்த முடிவில் வந்த தகவல்களின்படி பார்த்தால் இந்த எண்ணிக்கையில் பங்கெடுப்பையும் நாடெங்கும் சீரான முழு வெற்றியையும் இந்த வேலைநிறுத்தம் அடையாமல் இருந்திருக்கலாம். ஆனால் முக்கிய எதிர்க்கட்சிகள் நேரடியாகக் களத்தில் இறங்காமல் 10 மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலின்பேரில், அதுவும் முக்கியமாக இடதுசாரிகளின் முன்முயற்சியில், இந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனப் பார்க்கும்போது, இது பெரிய விஷயமே.

இதற்கு ஒரு காரணம் வங்கி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்ற எண்ணற்ற தொழில்வாரியான தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் ஆதரவுடன் இந்தப் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றதால் இது ஓரளவுக்குக் களைகட்டியது. தேர்தலை ஒட்டி இது நடைபெறுவதாலும் மோடி அரசின் ஐந்தாண்டுகளில் தொழிலாளர்கள் அதன்மீது அதிருப்தி கொண்டு அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர் எனப் பரவலான ஒரு பார்வை இருப்பதாலும் இது கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

எதிர்பார்ப்பை விஞ்சிய தாக்கம்

தொழிற்சங்கத் தலைவர்கள் எதிர்பார்த்ததைவிட இந்தப் பொது வேலைநிறுத்தம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதற்கு ஒரு காரணம் ஊடகங்கள். பொது வேலைநிறுத்தத்தை முழு அடைப்பு எனப் பல பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டன. எனவே தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு மட்டுமே அறைகூவல் விட்டிருந்தாலும் முழு அடைப்பு நடைபெறும் என ஒரு பாவனை பொதுமக்கள் மத்தியில் பரவியது. வட மாநிலங்களிலும் கர்நாடக, ஆந்திர, கேரளா மாநிலங்களிலும் பல இடங்களில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. சில இடங்களில் கடையடைப்புகளும் காணப்பட்டன. சென்னை உட்பட பல நகரங்களில் 50% பேருந்துகளும் ஆட்டோக்களும் இயங்கவில்லை. ஆங்காங்கு பரவலாக ஆர்ப்பாட்டங்களும் சில இடங்களில் சாலை, ரயில் மறியல்களும் நடைபெற்றன.

வங்கி ஊழியர்கள் தங்கள் பிரச்சினைகளையும் முன்னிறுத்திப் பொது வேலைநிறுத்தத்தோடு இணைந்து இருநாள் வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தது பொது வேலைநிறுத்தச் சூழல் உருவானதற்கு ஒரு முக்கியக் காரணம். வணிகர்கள் மத்தியில் வேலைநிறுத்த எதிர்பார்ப்பை இதுவே உருவாக்கியது.

முடங்கிய மும்பை போக்குவரத்து

இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பையில் இந்த வேலைநிறுத்தத்தின் தாக்கம் எவ்வாறிருந்தது என அறிய மின்னம்பலம் சார்பாக சர்வ ஷ்ரமிக் சங்கதாணா என்ற பிரபல தொழிற்சங்கத்தின் தலைவரான உதய் பட்டைத் தொடர்புகொண்ட போது, "மும்பையின் பொதுப் போக்குவரத்து பேருந்து நிறுவனமான BEST நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை முன்வைத்துக் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தை இந்தப் பொது வேலைநிறுத்தத்தோடு இணைந்து துவங்கியதால் 10,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடாமல் பெருநகர போக்குவரத்தே ஸ்தம்பித்தது. ஆட்டோக்களும் ஓடவில்லை” என்று கூறினார்.

“கடந்த இருபது ஆண்டுகளில் மும்பையின் தன்மையே மாறிவிட்டது. அது இனியும் ஒரு தொழில் நகரம் இல்லை. மும்பைக்குள் தொழிற்சாலைகளை பார்க்க முடியாது. தானே (Thane) பகுதியில்கூட தொழிலகங்கள் இருந்த இடங்களில் இப்போது ஐடி நிறுவனங்கள் வந்துள்ளன. இருந்த தொழிற்சலைகள் புனேவுக்கும் இதர வெளி மாவட்டங்களுக்கும் மாறிச் சென்றுவிட்டன. எனவே வங்கி, தொலைத்தொடர்பு போன்ற பொதுத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தனர். அலுவலகம் செல்ல BEST பேருந்துகளை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவில்லை. இருசக்கர வாகனங்கள் அலலது கார்களில் அலுவலகம் செல்லும் ஐடி பணியாளர்கள் போன்றவர்கள் வேலை செய்யும் அலுவலகங்கள் இயங்கின" என்றார் உதய் பட். "நாட்டின் மொத்த அந்நியச் செலாவணி, உள்நாட்டுப் பண பரிவர்த்தனைகள் மும்பையிலுள்ள வங்கிகளின் க்ளியரிங் ஹவுஸ்கள் மூலமாகத்தான் நடைபெறுகின்றன. வங்கிகளின் க்ளியரிங் ஹவுஸ்களில் வேலைநிறுத்தம் முழுவெற்றி. இவை இயங்காமல் பெருநகரில் பிசினஸ் எவ்வாறு நடைபெறும்?" என அவர் மேலும் கூறினார்.

சத்தீஸ்கர் மாநில சுரங்கத் தொழிலாளர் தலைவர் கோல்டி ஜார்ஜ் தற்போது ஒடிசா சுற்றுப்பயணத்தில் உள்ளார். கட்டாக் -புவனேஸ்வர் நகரங்களில் பேருந்துகள் இயங்கவில்லை, பாதிக்கு மேல் கடைகள் மூடப்பட்டிருந்தன, ஒடிசாவில் பொது வேலைநிறுத்தம் பந்த் ஆக மாறியுள்ளது என்றார் அவர். சத்தீஸ்கரிலும் சுரங்கப்பணிகள் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் போராட்டத்தில் பங்குகொண்ட விவசாயச் சங்கங்கள் மொராதாபாத், அலிகர் ஆகிய இடங்களிலிருந்து டெல்லிக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை மறித்துப் பொது வேலைநிறுத்தத்தை முழுஅடைப்பாக மாற்றினர்.

சென்னையிலும் தாக்கம்

சென்னையில் திருவெற்றியூர் - மணலி தொழிற்பகுதியில் கூட சிறிய நடுத்தர தொழிற்சாலைகள் பல இயங்கின. ஆனால் மின்னம்பலம் சார்பாகத் தொடர்பு கொண்டபோது அசோக் லேலண்ட் தொழிற்சங்கத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தலைவர் ஒருவர் எண்ணூர் ஃபவுண்டரீஸ், அசோக் லேலண்ட் மற்றும் MRF ஆகிய மூன்று பெரிய தொழிற்சாலைகளுமே இயங்காததால் வேலைநிறுத்தம் வெற்றி அடைந்ததாகத்தான் கணக்கு என்றார்.

பாண்டிச்சேரியிலுள்ள ஒரு தலைவர், அங்கு 90% கடைகள் மூடப்பட்டிருந்தன என்றும் தமிழ் நாட்டிலிருந்து வந்த இரு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது என்றும் தெரிவித்தார்.

வேலைநிறுத்தத்தில் பங்கெடுப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழகத் தலைமைச் செயலர் பயமுறுத்தினாலும் பல இடங்களில் அரசு ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை.

பொது வேலைநிறுத்தத்துக்கு வெளிநாடுகளிலிருந்தும் ஆதரவுச் செய்திகள் குவிந்தன. உலக தொழிற் சங்கக் கூட்டமைப்பு (WFTU) 130 நாடுகளிலுள்ள அதன் தொழிற்சங்கங்கள் சார்பாக வாழ்த்துச் செய்தியொன்றை அறிவித்தது.

வேலைநிறுத்தத்தின் விளைவு என்ன?

இந்த வேலைநிறுத்தத்தின் தாக்கம் நீண்டகாலத் தன்மை கொண்டது. காரணம் அது முன்வைத்த கோரிக்கைகள்.

தொழிற்சங்கங்கள் 12 கோரிக்கைகளை வைத்திருந்தன. அவற்றுள் முக்கியமானது மோடி அரசின் தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது. இரண்டாவது மிக முக்கியமான கோரிக்கை குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000 நிர்ணயம் செய்யப்படவேண்டுமென்பது. பல மட்டங்களிலான தொழிலாளர் ஊதியப் போராட்டங்களுக்கு இது நியாயம் கற்பிக்கிறது. உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கட்டிட வேலை செய்யும் மேஸ்திரி, பெயின்டர்கள் ஆகியோருக்கு தினக்கூலி ரூ. 600–700 கிடைக்கிறது. ஆனால் ஆஷா ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், பகலுணவு ஊழியர்கள் போன்ற தொழிலாளர்களுக்கு இதில் நான்கில் ஒரு பங்குகூட ஊதியமாகக் கிடைப்பதில்லை.

சமீபத்தில்தான் மாதம் ரூ.1500 பெற்றுக்கொண்டிருந்த அங்கன்வாடி தொழிலாளர்களின் ஊதியத்தை ரூ.3500 ஆக மோடி உயர்த்தினார். கிராமங்களில் மாடு மேய்க்கும் சிறுவனுக்குக் கிடைக்கும் தினக்கூலி ரூ.350. ஆனால், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் அங்கன்வாடி ஊழியருக்கு தினக்கூலி ரூ.120! அதாவது மூன்றில் ஒரு பங்கு. இப்படிப்பட்ட ஊதிய ஏற்றத்தாழ்வுகள் இந்த வேலைநிறுத்தத்தினால் வெளிச்சத்துக்கு வந்தன.

ஊதியம் உயர வேண்டும் என்ற உணர்வு பொதுவாகப் பரவவும் ஊதியப் போராட்டங்களுக்கு ஒரு நியாயம் கற்பிப்பதிலும் இந்த பொதுவேலைநிறுத்தம் முக்கியப் பங்காற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பொது வேலைநிறுத்தத்தின் 12 அம்சக் கோரிக்கைகளில் இதர சில கோரிக்கைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. விலைவாசியைக் கட்டுப்படுத்து, வேலைவாய்ப்பை உருவாக்கு எனும் பொதுவான கோரிக்கைகளைத் தவிர பணிபுரிவோர் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்து என்பது முக்கியமான ஒரு கோரிக்கை.

மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களைப் பங்கு மூலதன விற்பனையின் மூலமும் முழுமையாக நிறுவனத்தையே விற்பதன் மூலமும் தனியார்மயமாக்குவது நிறுத்தப்பட வேண்டும் என்பது இன்னொரு முக்கியமான கோரிக்கை.

நிராந்தரத் தொழிலாளர்களுக்கு பதிலாக ஒப்பந்தத் தொழிலாளர்களையும் இதர தற்காலிகத் தொழிலாளர்களையும் நியமிப்பதை நிறுத்து என்பது ஒரு கோரிக்கை. நிரந்தரத் தொழிலாளருக்குக் கொடுக்கும் அதே ஊதியத்தை ஒப்பந்தத் தொழிலாளருக்குக் கொடு என்பதும் ஒரு கோரிக்கை. ஹைதராபாத் நகரைச் சுற்றியுள்ள 3500 தொழிற்சாலைகளில் சுமார் 60% தற்காலிகத் தொழிலாளர்கள் என்ற கோணத்திலிருந்து பார்க்கும்போது இதன் முக்கியத்துவம் புரியும்.

இந்தப் பொது வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்த தொழிற்சங்கத் தலைமைகள் பொறுப்பாக நடந்துகொண்டன. பொது வேலைநிறுத்தம் நடைபெறும் தினத்தன்று மாணவர்களுக்கு IIT-JEE பரீட்சையும் நடைபெறுவதாக இருந்தது. தொழிற்சங்கத் தலைவர்கள் குழு ஒன்று மனிதவள மேம்பாட்டு அமைச்சரை அணுகி இந்த பரீட்சைகளைத் தள்ளிப்போடுமாறு கோரிக்கை வைத்தனர். அது கண்டுகொள்ளப்படவில்லை. தமிழக மின்வாரியத் தொழிலாளர் 50%க்கு மேல் போராட்டத்தில் பங்கெடுத்தனர். ஆனால், மின் சப்ளையைத் துண்டிக்கவில்லை.

தேர்தலில் எதிரொலிக்குமா?

அமைப்புசாரா தொழிலாளர் பகுதிகளில் பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி ஆகியவை அமல்படுத்தப்பட்டபோது 70--80% வேலையிழப்பு ஏற்பட்டது. மேலை நாடுகளில் உள்ளதுபோல வேலையிழப்பு நிவாரணம் கேட்கப்பட்டுள்ளது. டெல்லியில் AAP கட்சியினர் tab note bandi, ab vote bandi என்று எழுப்பியுள்ள முழக்கம் (நேற்று நோட்டு இல்லை, இன்று ஓட்டு இல்லை) நன்கு எடுபடுகிறது.

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் கிட்டத்தட்ட சரிசம வலிமையுடன் சரியான போட்டிபோடும் வரும் தேர்தலில் ஒரு சிறு பகுதி தொழிலாளர் வாக்குகள்கூட ஆளும் கட்சிக்கு எதிராகத் திரும்பினால் அதன் தாக்கம் வலிமையானதாக இருக்கும். தொழிலாளர்கள் குவிந்துள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தப் பொது வேலைநிறுத்தத்தின் உண்மையான தாக்கம் சில மாதங்களில் தெரியவரும்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon