மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

10% இடஒதுக்கீடு கூடாது: சீறிய தம்பிதுரை

10% இடஒதுக்கீடு கூடாது: சீறிய தம்பிதுரை

பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது பேசிய தம்பிதுரை, “சாதி அடிப்படையிலேயே இடஒதுக்கீடு இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பொது பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சாதி அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு திமுக, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மக்களவையில் நேற்று (ஜனவரி 8) சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தாக்கல் செய்தார்.

இதுதொடர்பாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் அதிமுக சார்பில் பேசிய மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, “இடஒதுக்கீடு எதற்காக வேண்டும்? அதிமுக சமூகநீதிக் கொள்கையை நம்புகிறது. நான் ஒரு சூத்திரன். சூத்திரனாக இருக்கும் காரணத்தால் நாங்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டோம். அதனால்தான் திராவிட இயக்கம் இடஒதுக்கீட்டுக்காகப் போராடியது. பெரியார் சமூகநீதிக்காகத்தான் திராவிடர் இயக்கத்தை ஆரம்பித்தார். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் ஏற்கெனவே பல திட்டங்கள் மூலமாகப் பலன்பெற்று வருகிறார்கள். நிலைமை அப்படியிருக்க தனியாக ஏன் இடஒதுக்கீடு வேண்டும்? இதன் அர்த்தம் நீங்கள் திட்டங்களைச் சரியாக செயல்படுத்தவில்லை என்பதுதானே” என்று கேள்வி எழுப்பினார்.

“அம்பேத்கர் உயர்படிப்பு படித்திருந்தும் சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டார். படித்திருந்தும் அவமானப்படுத்தப்பட்டதால்தான் சாதி ரீதியான இடஒதுக்கீட்டை கோரினார்” என்று தெரிவித்த தம்பிதுரை, பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து இடஒதுக்கீடு வழங்குவது சரியானது அல்ல, சாதி அடிப்படையிலேயே இடஒதுக்கீடு இருக்க வேண்டும். அரசியலமைப்பை உருவாக்கிய முன்னோடிகள் பொருளாதாரம் அடிப்படையில் அதை உருவாக்கவில்லை, சமூகநீதியின் அடிப்படையிலேயே உருவாக்கினர் என்றும் குறிப்பிட்டார்.

தீண்டாமைக் கொடுமைகள் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கிராமங்களில் இரட்டை குவளை முறை இருக்கிறது. சாதி உள்ளவரை இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாகப் பிரதமர் மோடி உறுதியளித்தார். இதைச் செய்திருந்தால் இந்த மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமே இருந்திருக்காதே? ஒருவன் இன்று ஏழையாக இருப்பான், பொருள் சேர்ந்ததும் அவன் பணக்காரனாக மாறிவிடுவான். பிறகெப்படி இதை நீங்கள் செயல்படுத்துவீர்கள். தான் ஏழை என்று லஞ்சம் கொடுத்து சான்றிதழ் பெறுவர். இதன்மூலம் ஊழல்தான் அதிகரிக்கும்” என்றும் அழுத்தமான வாதத்தை எடுத்துவைத்தார் தம்பிதுரை.

மசோதா குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “ஒருங்கிணைந்த முயற்சி, அனைவருக்குமான வளர்ச்சி என்பதன் அடிப்படையிலேயே இந்த இடஒதுக்கீட்டு மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இது சமத்துவத்துக்கான ஒரு நகர்வாகும். சமூக மேம்பாட்டுக்கு இது உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon