மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

மோடி பிரதமர் வேட்பாளர் இல்லை? ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் விவாதம்!

மோடி பிரதமர் வேட்பாளர் இல்லை? ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் விவாதம்!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அழைப்பின் பேரில் அவசரமாய் சென்னை வந்த பாஜக தலைவர் அமித் ஷா நேற்று ஜனவரி 8 ஆம் தேதி ஆலோசனையில் கலந்துகொண்டுள்ளார். இது தமிழக பாஜகவினர் மத்தியில் மட்டுமல்ல தேசிய அளவிலும் கூட பாஜகவினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான செயல்திட்டங்களை வகுப்பது பற்றி ஜனவரி 5ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெற்றுவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கூட்டம் பற்றி நாம் ஏற்கனவே (ஆர்.எஸ்.எஸ். அழைப்பு: அவசரமாய் சென்னை வந்த அமித் ஷா) செய்திகள் வெளியிட்டுள்ளோம். இந்த ஆண்டுக்கான அஜெண்டா வகுக்கும் இந்த கூட்டத்தில் தமிழக பாஜகவின் கூட்டணி பற்றிய நிலைப்பாடுகளும் அலசப்பட்டுள்ளன என்கிறார்கள் ஆர்எஸ்எஸ் வட்டாரத்தில்.

இதுகுறித்து காவிகள் வட்டாரத்தில் விசாரித்து அறிந்த தகவல்கள் இதோ....

“சென்னை மஹாநகருக்கான பஸ்தி சங்கமம் என்ற பெயரில் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது இந்தக் கூட்டம். தொடர்ந்து சில நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நேற்று திடீரென பாஜக தலைவர் அமித் ஷா கலந்துகொண்டார். உண்மையிலேயே இது திடீர் பங்கேற்புதான். ஏனெனில் பாஜக சார்பில் அமைப்புப் பொதுச் செயலாளர் ராம் மாதவ்தான் கலந்துகொள்ள வேண்டும். அவரும் கலந்துகொண்டிருக்கிறார். அவரையும் தாண்டி சில விசாரிப்புகளுக்காக அமித் ஷா அழைக்கப்பட்டார்.

முதலில் தமிழக நிலவரம் பற்றி ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்று பார்ப்போம். ஜனவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆர்எஸ்எஸ்சென்னை மஹாநகர் கூட்டம் தொடங்கிய நிலையில், பாஜக தலைவர் தமிழிசை, பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்கள்.

அது திருவாரூர் இடைத்தேர்தல் பற்றிய சந்திப்பு மட்டுமல்ல... அந்த இரு சந்திப்புகளுமே சங்கம் (ஆர்எஸ்எஸ்) சொல்லிதான் நடந்தது. தமிழகத்தில் பாஜக -அதிமுக கூட்டணி பற்றி இருவருமே எடப்பாடி பழனிசாமியோடு பேசியிருக்கிறார்கள்.

அப்போது எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது என்னவென்றால், “இப்போது தேர்தல் வைத்தால் கூட அதிமுக தனது வழக்கமான வாக்கு வங்கியில் இருந்து கொஞ்சம் இறங்கி 20% வரை பெறக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதை நாங்கள் மேலும் அதிகப்படுத்த முயற்சி செய்யுறோம். ஆனா, தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 3% தான் ஓட்டு இருக்கிறது.. தவிர தமிழகத்தில் சிறுபான்மையினர் ஓட்டு 15% வரை இருக்கிறது. பாஜகவோடு நாங்கள் கூட்டணி வைத்தால் இது அடிபட்டுப் போய்விடும். அதனால் பாஜக கூட்டணி என்பதற்கு அதிமுகவின் மேல் மட்டம் முதல் கீழ் நிலை வரை யாருக்கும் அபிப்ராயம் இல்லை’ என்று தெரிவித்துவிட்டார்.

மறுநாள் மஹாநகர் கூட்டம் தொடங்குவதற்கு முதல் நாள் இதுபற்றிய தகவல்கள் ஆர்எஸ்எஸ்ஸுக்குக் கூறப்பட்டன.

அமித் ஷா, ‘தமிழ்நாடு கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சங்கத்திடம் சொல்லியிருந்தார், இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு, ‘தமிழகத்தில் என்ன செய்ய இருக்கிறீர்கள்?’ என்று ஆர்எஸ்எஸ் தலைவர் கேட்டிருக்கிறார். விரைவில் தமிழகம் பற்றிய கூட்டணி முடிவு செய்யப்பட இருக்கிறது” என்று சொன்னவர்கள் அடுத்து தேசிய விவகாரம் பற்றிக் கூறினார்கள்.

“உத்தண்டியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஆலோசனைக் கூட்டத்தில் வர இருக்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக மோடியை நிறுத்தினால், மோடியை நிறுத்தாவிட்டால் என இரு அம்சங்களும் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.

பிரதமர் வேட்பாளராக அடுத்த தேர்தலில் மோடி நிறுத்தப்பட மாட்டார் என்பதை ஆர்எஸ்எஸ் இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டது. அதன் அடிப்படையில் நாக்பூரில் இருந்து பல்வேறு சிக்னல்கள் மோடிக்கு அனுப்பப்பட்டன. ஆனால் மோடி அதை கண்டுகொள்ளவில்லை.

இந்த பின்னணியில்தான் வருகிற 2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் பிரதமர் மோடி என்பதை விட, மோடி பிரதமர் வேட்பாளர் இல்லை என்றால் பாஜகவுக்கு மக்களின் ஆதரவு அதிகரிக்கும் என்று ஒரு கருத்தும் பேசப்பட்டிருக்கிறது.அமித் ஷாவிடம் இதுகுறித்த பதில் கோரப்பட்டிருக்கிறது. சங்கத்தின் உத்தரவுகளை மீறி சில தனி நபர்களுக்கு குறிப்பாக நிர்மலா சீதாராமன் போன்றவர்களுக்கு மோடி அளிக்கும் முக்கியத்துவம் பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் தமிழக தேர்தல் பொறுப்பாளராக மோடி-அமித் ஷா கூட்டணி முதலில் நிர்மலா சீதாராமனைதான் முடிவு செய்தது. ஆனால் ஆர்எஸ்எஸ் அந்தப் பட்டியலை மாற்றித் தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை தமிழகத்துக்கு நியமித்திருக்கிறது. ஆக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் மோடிக்கும் இடையே இடைவெளி அதிகமாகியிருக்கிறது என்பதையே இந்த ஆர்எஸ்எஸ்ஸின் சென்னை சங்கமம் எடுத்துக் காட்டுகிறது.

ஆர்எஸ்எஸ் சார்பில் இதுபற்றிய வெளிப்படையான அறிவிப்புகள் இருக்காது. ஆனால் பாஜகவுக்குள் மோடிக்கு எதிரான குரல்கள் இன்னும் அதிகரிக்கக்கூடும்” என்று முடித்தனர்.

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon