மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

சபரிமலை சிக்கல்: உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும்!

சபரிமலை சிக்கல்: உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும்!

பா.சிவராமன்

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தவறு என்று மரபுவழி நின்று பேசுபவர்கள் பலர் உண்டு. இதை மாற்ற வேண்டும் என்று சொல்பவர்களிலும் பலர், இது போன்ற உணர்வுபூர்வமான பிரச்சினையைக் கறாராக அணுக முடியாது என்கிறார்கள். இதில் நீக்குப்போக்கும் நெகிழ்ச்சியும் தேவை, பொறுமையாகக் கையாள வேண்டும் என்று சொல்பவர்களில் முற்போக்காளர்களும் பெண்ணியவாதிகளும்கூட உண்டு.

ஆனால், இதில் சமரசத்துக்கு இடமில்லை. பிரச்சினை வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனத் தீர்க்கப்பட்டாக வேண்டும். இது ஆழ்ந்த கலாச்சார, மதரீதியான பிரச்சினையாக இருக்கலாம். இதில் பிளவையும் மோதலையும் தவிர்க்க முடியாது. இத்தகைய மோதல்கள் வாயிலாகத்தான் வரலாறு முன்னேறுகிறது என்று இதர பெண்ணியவாதிகளும் முற்போக்காளர்களும் வாதிடுகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் நடந்த விவாதம்

இத்தகைய கருத்தியல் - அரசியல்ரீதியான சர்ச்சைகள் ஒருபுறமிருந்தாலும், உச்ச நீதிமன்றம் இவையனைத்துக்குள்ளும் செல்லவில்லை. செல்லவும் செல்லாது. இந்த விவகாரம் எழுப்பியுள்ள சட்டப் பிரச்சினைகளை மட்டுமே இனங்கண்டு அவற்றை அலசி அந்த அடிப்படையில் ஒரு தீர்ப்பை அளிக்கும். இவ்வாறு இனங்காணப்பட்ட சட்டப் பிரச்சினைகள் என்ன; அவை குறித்து இந்த வழக்கில் சட்டரீதியாக எத்தகைய வாதங்களும் எதிர்வாதங்களும் எழுப்பப்பட்டன, சம்பந்தப்பட்ட பல்வேறு இதர பிரச்சினைகள் குறித்து சட்டத்தின் நிலைப்பாடு என்ன என்பனவற்றைத் தொகுத்து இங்கு முன்வைக்கிறோம்.

உச்ச நீதிமன்றப் பெரும்பான்மை தீர்ப்பையும் பெண்களுக்குத் தடை நீடிக்க வேண்டும் என்ற நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் சிறுபான்மை தீர்ப்பையும் நீதிமன்றத்தின் நண்பர்கள் (அமிக்கஸ் க்யூரி) சமர்ப்பித்த அறிக்கைகளையும், பெண்களை அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்த தரப்பின் வழக்கறிஞரான இந்திரா ஜெய்சிங் எழுத்துமூலமாகச் சமர்ப்பித்த அறிக்கைகளையும் ஆதாரமாகக் கொண்டு இந்தச் சுருக்கமான தொகுப்பைத் தருகிறோம்.

எந்த ஒரு வழக்கிலும் ஆரம்ப விசாரணைக்குப் பிறகு, விடை காண வேண்டிய சட்டப் பிரச்சினைகளை நீதிமன்றம் வகுத்து அதன்மீது விசாரணையைத் தொடர்ந்து, பின்னர் தீர்ப்பளிப்பது வழக்கம். இவ்வாறு இவ்வழக்கில் வரையறுக்கப்பட்ட சட்டப் பிரச்சினைகளாவன:

1) பெண்ணினத்துக்கே உரித்தான உடற்கூறு உயிரியல் காரணி (அதாவது மாதவிடாய் வயது வரம்பு) ஒன்றின் அடிப்படையில் பெண்களை ஒதுக்கிவைப்பது சாதி, மத, இனரீதியில் பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிரான அரசியல் சட்டப் பிரிவுகளான பிரிவுகள் 14, 15 மற்றும் 17 ஆகியவற்றின்படி ‘பாரபட்சமாகுமா’? அரசியல் சட்டத்தின் பிரிவு 25இன்படி எந்த ஒரு மதத்தையும் அதன் நெறிமுறைகளையும் பின்பற்றுவதற்கு இந்தியக் குடிமகளுக்கு உரிமை இருந்தாலும் அத்தகைய உரிமை பொது வாழ்க்கை ஒழுங்கு, தார்மிக நெறி மற்றும் ஆரோக்கியம் ஆகிய நிபந்தனைகளுக்குட்பட்டது. இந்தப் பின்னணியில் சபரிமலைக்குப் பெண்கள் செல்வதைத் தடுப்பது ‘தார்மிக நெறி’ என்ற நிபந்தனைக்குட்பட்டதாகுமா?

2) அரசியல் சட்டப் பிரிவு 25இன்படி தனது சொந்த மத விவகாரங்களை நிர்வகித்துக்கொள்ள எந்த ஒரு மதத்துக்கும் உரிமை இருந்தாலும் பெண்களை ஒதுக்கிவைப்பது மத நிறுவனம் ஒன்றின் அத்தகைய உரிமைகளின் வரம்புக்குள் வரும் ‘அத்தியாவசியமான மதரீதியான நடைமுறையாகுமா’?

3) தங்களுக்கே உரித்தான பிரத்யேக மத நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கான உரிமை மத உட்பிரிவுகளுக்கு உள்ளது என்றாலும் ஐயப்பன் கோயில் அல்லது பக்தர்கள் ஒரு மத உட்பிரிவு என்ற வகையைச் சேர்ந்தவர்களா? அப்படியே இருந்தாலும் அரசியல் சட்டத்தின் பிரிவு 290-Aஇன்படி கேரளம் மற்றும் தமிழ்நாடு அரசு நிதியிலிருந்து நிதி பெறும் சட்டரீதியான சபரிமலை தேவஸ்தான போர்டு அரசியல் சட்டப் பிரிவுகள் 14, 15(3), 39(a) மற்றும் 51-A (e) ஆகியவற்றில் பொதிந்துள்ள அரசியல் சட்டக் கோட்பாடுகள் / தார்மிக நெறி ஆகியவற்றை மீறி அத்தகைய நடைமுறைகளில் ஈடுபடலாகுமா?

4) கேரளம் இந்துப் பொது வழிபாட்டுத் தலங்கள் (நுழைவுக்கு அனுமதி பெறுதல்) விதிகளில் உள்ள 3ஆவது விதி 10இல் இருந்து 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்க ‘மத உட்பிரிவுகளை’ அனுமதிக்கிறதா? அப்படியென்றால் பெண்கள் கோயிலுக்குள் நுழைவதைப் பாலின அடிப்படையில் தடைசெய்வதன் மூலம் அது அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 14, 15(3)க்கு எதிராக இல்லையா?

5) கேரளம் இந்து பொதுவழிபாட்டுத் தலங்கள் (நுழைவுக்கு அனுமதி பெறுதல்) விதிகள் 1965இன் விதி 3(b) (Rule) கேரளா இந்து பொதுவழிபாட்டுத் தலங்கள் (நுழைவுக்கு அனுமதி பெறுதல்) சட்டம் 1965 (Act) என்ற சட்டத்தை மீறியதாகாதா? அப்படியே அது அந்த சட்டத்துக்குட்பட்டது என்று இருந்தாலும் அது அரசியல்சட்டத்தின் பகுதி IIIஇன் ஷரத்துகளை மீறியதாகாதா?

இந்த ஐந்து சட்டப் பிரச்சினைகள் (points of law) உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட பெஞ்சால் புதிதாக வரையறை செய்யப்பட்டவை அல்ல. முதலில் சபரிமலை கோயில் நிர்வாகம் வழிபாட்டுக்குப் பெண்களை அனுமதிக்க மறுப்பதைத் தடை செய்ய வேண்டும் எனக் கேரள உயர் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட வழக்கில் தடை நீடிக்கலாம் எனவும் பெண்களை வழிபாட்டுக்கு அனுமதிக்க மறுத்தும் கேரள உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சு தீர்ப்பளித்தது (1993 எஸ்.மஹேந்திரன் Vs. செயலர், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, திருவனந்தபுரம் என்ற வழக்கு). கேரள உயர் நீதிமன்றமும் கிட்டத்தட்ட இதே சட்டப் பிரச்சினைகளை எழுப்பியது.

சபரிமலை பக்தர்கள் இந்து மதத்தின் ஒருஉட்பிரிவு என்றும் ஆகவே இவர்களுக்கு அரசியல் சட்டத்தின் பிரிவு 26இன்படி தங்களது பிரத்யேக மத சம்பிரதாயங்கள்படி தங்கள் ஆலயங்களை நிர்வாகம் செய்யவும் வழிபாடு நடத்தவும் உரிமை உள்ளது என்றும் இது பெண்களுக்கு வழிபாட்டு உரிமையை அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 14க்கு எதிரானது இல்லையென்றும் தீர்ப்பளித்தது.

(உச்ச நீதிமன்றம் ஏன் மாறுபட்ட தீர்ப்பை அளித்தது? தொடர்ந்து அலசுவோம்…)

புதன், 9 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon